சனி, ஜனவரி 14, 2012

அமெரிக்காவில் 1,960 பேரை வீட்டுக்கு அனுப்பும் நோவார்டிஸ்

ஜெனிவா:  ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிப்பு நிறுவனமான நோவார்டிஸ் இந்த ஆண்டு அமெரிக்காவில் 1,960 பேரை பணிநீக்கம் செய்யவிருப்பதாக அறிவித்துள்ளது. 

ஸ்விட்சர்லாந்தைச் சேர்ந்த மருந்து தயாரிக்கும் நிறுவனம் நோவார்டிஸ் ஏஜி. உயர் ரத்த அழுத்தத்திற்காக அந்நிறுவனம் தயாரித்துள்ள 2 மருந்துகளின் விற்பனை மந்தமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் அந்நிறுவனம் அமெரிக்காவில் 1,960 பேரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.

அதன்படி விற்பனை பிரிவில் உள்ள 1,630 பேரும், அந்நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகமான நியூஜெர்சியில் 330 பேரும் நீக்கப்படுவார்கள். 

உயர் ரத்த அழுத்தத்திற்கான டியோவான் என்ற மருந்தின் காப்புரிமை காலம் முடிந்துவிட்டதாலும், இன்னொரு உயர் ரத்த அழுத்த மருந்தான டெக்டர்னாவின் ஆய்வு தோல்வி அடைந்துள்ளதால் இந்த பணிநீக்கம் அவசியம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இது குறித்து அந்நிறுவன அதிகாரி டேவிட் எப்ஸ்டீன் கூறியதாவது,

மருந்துப்பொருட்கள் பிரிவுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகள் பெரும் சவாலான காலமாக இருக்கும். பணிநீக்கம் ஒரு இக்கட்டான முடிவு தான் என்றாலும் அது தேவையான ஒன்றும் கூட என்றார்.

இந்த பணிநீக்கத்தால் இந்த ஆண்டு முதல் 450 மில்லியன் டாலர் மிச்சப்படுத்த முடியும் என்கிறது அந்நிறுவனம். மேலும் சோதனை செய்யப்பட்ட மேலும் இரண்டு மருந்துகளையும் அந்நிறுவனம் கைவிட்டுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக