புதுடெல்லி : பயங்கரவாதக் குற்றம் சாட்டப்பட்டு பணியில் இருந்து நீக்கப்பட்ட பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவன விஞ்ஞானி ஏஜாஸ்அகமது மிர்சாவை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும் என்று பிரஸ் கவுன்சிலின் தலைவர் நீதிபதி மர்கண்டேய கட்ஜு கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. ஆண்டனி மற்றும் கர்நாடக முதல்வர் ஜகதீஷ் ஷெட்டர் ஆகியோருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், மிர்சா பயங்கரவாதச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதுவும் இல்லாதபட்சத்தில் அவரை மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்றும் அவர் கைது செய்யப்பட்டதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பொது மன்னிப்புக் கோர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மிர்சா பணி நீக்கம் செய்யப்படுவதற்கு முன் எந்தப் பதவியில் இருந்தாரோ அந்தப் பதவியையே அவருக்கு வழங்க வேண்டும் என்றும் கோரியுள்ள கட்ஜு, சில மதவாத சக்திகளால் முஸ்லிம்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என்று சித்திரிக்கப்பட்டு வரும் நிலையில், இவ்வாறு செய்யவில்லை எனில் அது நாடு முழுவதும் தவறான தகவலையே தரும் என்றும் கூறியுள்ளார்.
குண்டு வெடிப்புச் சம்பவங்களுடன் முஸ்லிம்களைத் தவறாக தொடர்பு படுத்துவது குறித்து கடந்த 6ஆம் நாள் தாம் வெளியிட்ட அறிக்கையை நினைவு கூர்ந்துள்ள கட்ஜு, சிறையில் தான் துன்புறுத்தப்பட்டதாக மிர்சா தொலைக்காட்சிகளில் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக பயங்கரவாதக் குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட மிர்சாவுக்கு எதிராக எவ்வித ஆதாரமும் இல்லாததால் அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்ய தேசிய புலணாய்வு நிறுவனம் மறுத்து அவருக்குப் பிணை வழங்கி விடுவித்துள்ளது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக