செவ்வாய், மார்ச் 05, 2013

பேராசிரியர்களிடம் எதிர்ப்பு எதிரொலி மோடிக்கு விடுக்கப்பட்ட அழைப்பை ரத்து செய்தது அமெரிக்க பல்கலை !!

வாஷிங்டன்: அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரி ‘வார்டன் ஸ்கூல் ஆப் பிசினஸ்’  இதில் உள்ள பொருளாதார கல்வி அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் இந்தியாவில் இருந்து முக்கிய தலைவர்களை அழைத்து உரையாற்ற வைப்பது வழக்கம்.இந்நிலையில், வரும் 22, 23ம் தேதி இந்த பள்ளியில் பொருளாதார கருத்தரங்கு நடக்கிறது.

இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் உரையாற்றுமாறு குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு வார்டன் கல்லூரி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.இந்நிலையில், பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த டூர்ஜோ கோஸ், அனியா லூம்பா, சுவிர் கவுல் ஆகிய 3 பேராசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அவர்கள் தங்கள் கோரிக்கைக்கு ஆதரவாக ஒரு மனு தயாரித்து, அதில் 137 பேரின் கையெழுத்தை பெற்று, வார்டன் பொருளாதார கல்லூரிக்கு அனுப்பினர்.அதில், ‘‘குஜராத்தின் வளர்ச்சியைப்பற்றி இருவித கருத்துகள் நிலவுகின்றன. மனித உரிமை மீறலில் குஜராத் மாநிலம் முன்னணியில் உள்ளது. இப்படிப்பட்ட நிலையில், பொருளாதார வளர்ச்சி என்பது, மனித உரிமை மீறலுடன் தொடர்புபடுத்தி பார்க்க வேண்டியுள்ளது. எனவே, மோடியை உரையாற்ற அழைப்பது தவறு’’ என்று கூறப்பட்டிருந்தது. திடீர் எதிர்ப்பை தொடர்ந்து, மோடிக்கு விடுத்த அழைப்பை வார்டன் கல்லூரி ரத்து செய்துள்ளது. இதை முறைப்படி மோடி அலுவலகத்துக்கு தெரிவித்து விட்டதாகவும் கல்லூரி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
1

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக