பெங்களூர்:கர்நாடகா அரசின் கெளவ விருதான பஸவா விருதை சமூக ஆர்வலர் மேதா பட்கர் நிராகரித்துள்ளார்.மாநிலத்தை ஆளும் பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகள் மற்றும் சட்டவிரோத சுரங்க தொழில் குறித்து விசாரணை நடத்திய லோக் ஆயுக்தா அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்காதது ஆகியவற்றை கண்டித்து இவ்விருதை புறக்கணிப்பதாக மேதா பட்கர் தெரிவித்துள்ளார்
.
வடக்கு கர்நாடகாவில் ஒரு பொது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மேதா பட்கர் விருதை நிராகரிக்கும் அறிவிப்பை வெளியிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியது: ‘தனியார் மயமாக்கல் மூலமாக கர்நாடகா அரசு இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்த்துள்ளது. விவசாய-அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்டவர்களை புறக்கணிக்கிறது. ஆகையால் பஸவா விருது எனக்கு வேண்டாம். வேறு எவருக்கேனும் அவ்விருதை வழங்கவும். எனது நண்பர்களுடன் கலந்தாலோசித்து இந்த முடிவை எடுத்துள்ளேன் என்று மேதா பட்கர் கூறினார்.
2011 டிசம்பர் 1-ஆம் தேதி 2010-ஆம் ஆண்டிற்கான பஸவா விருதிற்கு மேதா பட்கர் தேர்வுச் செய்யப்பட்டுள்ளதாக கன்னட-கலாச்சார துறை அமைச்சர் கோவிந்த் கர்ஜோல் அறிவித்தார். விருது வழங்கும் தேதியை இதுவரை அறிவிக்கவில்லை. 12-ஆம் நூற்றாண்டில் சமூக சீர்திருத்தம் மற்றும் மத நல்லிணக்கத்திற்காக பாடுபட்ட கவிஞர் பஸவேஸ்ரய்யாவின் பெயரில் 2001-ஆம் ஆண்டு முதல் இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இவ்விருதின் பரிசு தொகை ரூ.10 லட்சமாகும்.
ஏ.பி.ஜெ.அப்துல்கலாம், ஹெச்.நரசிம்ஹய்யா, சுசீலா அம்மாள் ஆகியோர் இவ்விருதுகளை முன்பு பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக