வியாழன், பிப்ரவரி 09, 2012

விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்கள் - விவரணப் படம் வெளியிட்ட இலங்கை ! (வீடியோ இணைப்பு உள்ளே)

விடுதலைப் புலிகள் செய்த அட்டூழியங்களை விவரிப்பதாக கூறும் ஒரு விவரணப் படத்தை இலங்கை அரசு நேற்று (08.02.2012) வெளியிட்டுள்ளது.
விடுதலைப்புலிகளுக்கெதிரான போரில் இலங்கை ராணுவம் செய்த போர்க்குற்றங்களை சேனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டது மக்கள் மத்தியில் மிகுந்த துயரத்தையும் இலங்கை அரசுக்கெதிரான கோபத்தையும் ஏற்படுத்தியது. மேலும் இலங்கை அரசிற்கெதிராக மேற்கத்தேய நாடுகள் பலவற்றிலும் அங்குள்ள ஈழத்தமிழர்கள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தற்போது இலங்கை அரசு ”கொடூரங்கள்” என்ற தலைப்பில்
ஒரு விவரணப்படத்தை வெளியிட்டுள்ளது. இதில் கடந்த 30 ஆண்டுகளாக விடுதலைப்புலிகள் செய்த அட்டூழியங்களை விளக்கியிருப்பதாக அரசு தெரிவித்துள்ளது. மே 2009 க்கு முன்பு விடுதலைப்புலிகளின் கீழ் வசித்து கொடுமைகளை அனுபவித்தவர்கள் அதனைப் பற்றி பேசுவதும் இதில் இடம் பெற்றுள்ளது.விடுதலைப்புலிகள் தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் சிங்களப் பொதுமக்களை கண்மூடித்தனமாக சுட்டுக் கொல்வதும் குழந்தைகளை போரில் கட்டாயமாக ஈடுபடுத்துவதும் இதில் ஆவணமாக்கப்பட்டுள்ளது. வலையன்மடம் என்ற இடத்தில் உள்ள ஒரு பாதிரியார் , ”மார்ச் 2009 ஆம் ஆண்டு தேவாலயத்தில் தஞ்சம் புகுந்திருந்த 600 குழந்தைகளை விடுதலைப்புலிகள் கடத்திச் சென்ற நிகழ்வைக்” கூறுவதும் இதில் இடம் பெற்றுள்ளது.சேனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய பொய்யான தகவல்களுக்கு பதிலாக இந்த விவரணம் வெளியிடப்படுவதாக” தேசிய பாதுகாப்பு ஊடக மையத்தின் பொது இயக்குனர் லக்ஷ்மண் ஹூலுகல்லே ஆவணப்படத்தை வெளியிடும்போது தெரிவித்தார். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கைக்கெதிராக தீர்மானம் நிறைவேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த ஆவணப்படம் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக