போலி செக் கொடுத்து ஏமாற்றிய வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனை கைது செய்ய ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கு பற்றிய விவரம் வருமாறு: முன்னாள் கிரிக்கெட் கேப்டன் அசாருதீன். அவருக்கு சொந்தமாக டெல்லியில் ஒரு
வீட்டுமனை உள்ளது. ரூ.4.5 கோடி மதிப்புடைய அந்த வீட்டை விற்க அசாருதீன் முடிவு செய்தார்.இதுபற்றி இணையதளத்தில் அவர் ஒரு விளம்பரம் கொடுத்தார். அதைப் பார்த்த ஒரு டெல்லி தொழில் அதிபர் சோலங்கி அந்த வீட்டை வாங்க முடிவு செய்தார். அதற்காக அசாருதீனுக்கு முன்பணமாக ரூ.1.5 கோடி கொடுத் தார். இந்த சம்பவம் 2008ம் ஆண்டு நடந்தது. அந்த வீட்டின் பத்திரம் அசாருதீன் மற்றும் அவரது முதல் மனைவி சங்கீதா பிஜ்லானி ஆகியோரின் பெயரில் உள்ளது. எனவே வீட்டை விற்க வேண்டுமானால் சங்கீதா பிஜ்லானியின் சம்மதத்தையும் பெற வேண்டும். அவரின் சம்மதம் பெறும் நடவடிக்கையில் அசாருதீன் ஈடுபட்டு இருந்தார்.
இதற்கிடையில் நகரின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து விட்டது. அதனால் வீட்டை விற்க அசாருதீன் மறுத்து விட்டார். இதனால் தான் கொடுத்த பணத்தை கொடுக்கும்படி சோலங்கி கேட்டார். உடனே ரூ.1.5 கோடிக்கு ஒரு காசோலையை அசாருதீன் கொடுத்தார். அதை வங்கியில் போட்டார் சோலங்கி. ஆனால் வங்கி கணக்கில் பணம் இல்லை என்று அசாருதீன் கொடுத்த செக் திரும்பி விட்டது.
இதனால் அதிர்ச்சி அடைந்த சோலங்கி, அசாருதீனிடம் இது பற்றி தெரிவித்தார். மீண்டும் ஒரு செக்கை அசாருதீன் கொடுத்தார். அதுவும் பணமில்லை என்று திரும்பி விட்டது. 3வது முறையாகவும் இதேபோல பணமில்லை என்று அசாருதீன் கொடுத்த செக் திரும்பி விட்டதால், ஆத்திரம் அடைந்த சோலங்கி, டெல்லி மெட்ரோ பாலி டன் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்£ர்.
இந்த வழக்கில் கோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அசாருதீனுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதேபோல 3 முறை நீதிமன்றம் உத்தரவிட்டும் நீதிமன்றத்தில் அசாருதீன் ஆஜராகவில்லை. இந்த நிலையில் இந்த வழக்கு நேற்று முன்தினம் மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை மாஜிஸ்திரேட் விக்ராந்த் விசாரித்து, ‘இந்த வழக்கில் நீதிமன்றத்தில் வரும் மார்ச் 1ம் தேதி அசாருதீன் நேரில் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக