அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள சீனத் துணை அதிபர் ஷி ஜின்பிங், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், சீனா செயற்கையாக தனது கரன்சி மதிப்பைக் குறைத்துள்ளது பற்றி ஒபாமாவும், அமெரிக்காவின் "பாதுகாப்பு வாதம்' (ப்ரடக்ஷனிசம்) பற்றி ஜின்பிங்கும் பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் எதிர்கால அதிபராக கருதப்படும், தற்போதைய துணை அதிபர் ஷி ஜின்பிங், நான்கு நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார். அவரது
பயணம் அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனை முதலில் சந்தித்துப் பேசிய ஜின்பிங், தொடர்ந்து அமெரிக்க ராணுவ தலைமையகமான "பென்டகனுக்கு' சென்றார். அங்கு, அவருக்கு இதுவரை யாருக்கும் அளிக்கப்படாத வகையில், 19 முறை வானில் துப்பாக்கியால் சுட்டு வரவேற்பு அளிக்கப்பட்டது.இதையடுத்து, அதிபர் ஒபாமா, ஜின்பிங் சந்திப்பு நடந்தது. இதில், இருதரப்பு வர்த்தகம், மனித உரிமைகள், தைவான் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.
குறிப்பாக, சீனா தனது வர்த்தக ஏற்றுமதிக்கு வசதியாக கரன்சியின் மதிப்பை செயற்கையாகக் குறைத்து வைத்துள்ளதைச் சுட்டிக் காட்டிய ஒபாமா, சர்வதேச விதிகளின்படி சீனா வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.அதேநேரம், அமெரிக்கா தனது வர்த்தகத்தைப் பாதுகாக்கும் நோக்கில், சர்வதேச விதிமுறைகளை மீறி, பாதுகாப்பு வாதத்தின் அடிப்படையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது தேவையற்ற வரிகளை விதிப்பது குறித்து ஜின்பிங் எச்சரித்ததாக, சீனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான "ஷின்ஹூவா' தெரிவித்துள்ளது.
இதையடுத்து, துணை அதிபர் ஜோ பிடன் மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டனுடன் ஜின்பிங் பேசிய போது, சீனாவின் மனித உரிமைகள் விவகாரம் குறித்து விவாதிக்கப்பட்டது.இதுகுறித்து, ஜின்பிங் பேட்டியளிக்கையில், "மனித உரிமைகள் விவகாரத்தில், சீனா பெரும் சவால்களை எதிர்கொண்டு வருகிறது' எனத் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக