புதன், பிப்ரவரி 15, 2012

சூப்பர் ஆபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர் !

சூப்பர் ஆஃபர்: காசு கொடுத்தால்தான் கக்கூசுக்கும் தண்ணீர் மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.2020-ல் இப்படி நடக்கலாம்.
சென்னையில் வசிக்கும் நீங்கள் காலையில் எழுந்து வீட்டிற்குள் இருக்கும் கக்கூசுக்குப் போகிறீர்கள். கக்கூஸ் கதவு திறக்க மறுக்கின்றது. இடது புற மின்னணு பட்டியில் ஒரு தகவல் பளிச்சிடுகிறது.‘அன்பார்ந்த வாடிக்கையாளரே, உங்கள் கணக்கில் போதுமான கையிருப்பு இல்லாததால் தற்காலிகமாக இந்த சேவை நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நிலுவைத் தொகையான ரூபாய் 2,212 செலுத்தி கணக்கை புதுப்பித்துக் கொண்டு எங்கள் சேவைகளை தொடர்ந்து அனுபவிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். எங்கள் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொள்ள எண் 66832ஐ அழுத்துங்கள். உங்களுக்கு சேவை
செய்வதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்’.
நம்ப முடியவில்லை என்கிறீர்களா? உங்கள் செல்பேசியில் பேசுவதற்கு சேவை வழங்கும் நிறுவனமும், உங்கள் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்ப்பதற்கு சேவை வழங்கும் டிடிஎச் நிறுவனமும் இப்படிப்பட்ட தகவலை அனுப்புவது போல கக்கூஸூக்கு தனியார் சேவையும் அது தொடர்பான கட்டண தகவலும் வராது என்று உறுதியாக நினைக்கிறீர்களா? உங்கள் நினைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது.
இந்து நாளிதழில் ஜனவரி 21, 2012 அன்று வெளியான ஒரு செய்தியின் படி, மத்திய அரசு தண்ணீர் வழங்கும் சேவைகளை தனியார் மயமாக்க கோரும் தேசிய தண்ணீர் கொள்கையின் வரைவை வெளியிட்டிருக்கிறது.

அந்தக் கொள்கையின்படி, தண்ணீர் வழங்குவதற்கான செலவுகளை முழுமையாக பயனாளர்களிடமிருந்து வசூலிக்கும்படியாக தண்ணீருக்கு விலை வைக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த 15 பக்க வரைவு-தேசிய-தண்ணீர்- கொள்கையில் ‘தண்ணீர் துறையில் சேவை வழங்கும் பணியிலிருந்து அரசு தன்னை விடுவித்துக் கொண்டு தனியார் நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் ஈடுபட ஊக்கமளிக்க வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.
‘இந்திய மக்களின் ஏழ்மை ஒழிய ஒரே வழி பொருளாதார வளர்ச்சிதான். ஆண்டுக்கு 8% வளர்ச்சி ஏற்பட்டு விட்டால் ஏழ்மை ஒழிந்து விடும், 10% வளர்ச்சி ஏற்பட்டு விட்டால் 2020-ல் இந்தியா வல்லரசாகி விடும்’ என்ற தமது சவுடாலின் அடிப்படையில் செயல்படுகிறார்கள் ஆளும் வர்க்கத்தினர். ‘நாட்டு மக்கள் வீட்டுக்குப் பின்புறம் இருக்கும் கிணற்றில் நீர் இறைத்துக் குளித்தால்’ அது நாட்டின் மொத்த உற்பத்தி (GDP) கணக்கெடுப்பில் சேராது. ‘மீட்டர் பொருத்தப்பட்ட சேவையில் தண்ணீர் வாங்கி அதற்கான கட்டணத்தை தனியார் நிறுவனத்துக்கு மாதா மாதம் கட்ட ஆரம்பித்தால்’ குளிக்கும் நீரின் மதிப்பு மொத்த உற்பத்தியில் சேர்ந்து நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும். இதுதான் வளர்ச்சி வீதத்தை அதிகரிக்கும் சூத்திரம்.
அப்படி மூளையைக் கசக்கி மன்மோகன் சிங், ப சிதம்பரம் போன்ற ‘பொருளாதார நிபுணர்கள்’ சொந்தமாக இந்தக் கொள்கையை உருவாக்கினார்கள் என்று நினைத்தீர்கள் என்றால் அங்கும் கோட்டை விட்டு விட்டீர்கள். இது 2005-ல் வெளியான உலக வங்கி அறிக்கையிலிருந்து காப்பி பேஸ்ட் செய்யப்பட்ட கொள்கை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
மேற்படி உலகவங்கி அறிக்கையில் ‘இந்தியாவில் நீடித்த பொருளாதார வளர்ச்சி வேண்டுமானால், தண்ணீர் கட்டுமானங்களை உருவாக்கி நெறிப்படுத்தும் பணிகளை விட்டு அரசு வெளியேறி தண்ணீர் பயனர்களின் செயல்பாடுகளுக்கு வசதி செய்து தருவதை மட்டும் செய்ய வேண்டும்’ என்று சொல்லப்பட்டிருந்தது. விவசாயம், தண்ணீர் மற்றும் துப்புரவு துறைகளில் போட்டியை ஊக்குவிக்கும்படியும் அந்த அறிக்கை பரிந்துரை செய்திருந்தது. ‘தங்கள் சித்தம், எங்கள் பாக்கியம்’ என்று முன்னேறிய நாடுகளுக்கு இணையான அத்தகைய சேவையை இந்திய மக்கள் பெறும் சூழலை உருவாக்கும் பணியை நம்மை ஆளும் தலைவர்கள் ஆரம்பித்து விட்டிருக்கிறார்கள்.
2G அலைக்கற்றை உரிமத்துக்கு பல நூறு கோடிகள் லஞ்சம் கொடுத்து/வாங்கி தனியார் சேவை வழங்கப்படுவதைப் போல தண்ணீர் வழங்கும் சேவை உரிமம் பெறுவதற்கான ஏலம், அதைத் தொடர்ந்து தனியார் முதலீடு, தாம் பயன்படுத்தும் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் மாதா மாதம் மக்கள் செலுத்தும் கட்டணம் என்று இந்தியாவின் பொருளாதார ‘வளர்ச்சி’ அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விடும். உரிமத்துக்கு சட்டப்படி கொடுக்கும் தொகை, சட்ட விரோதமாக அரசியல்வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் கொடுக்கும் லஞ்சம், தமது முதலீட்டுக்கான லாபம் என்று தனியார் நிறுவனத்துக்கு குளிப்பவரும், கை கழுவுபவரும் கப்பம் கட்ட வேண்டியிருக்கும்.
அதற்கு பதிலாக, வாடிக்கையாளர் சேவையை தொலைபேசியில் அழைத்தால் இனிய குரலில் வழிகாட்டல்களும், சேவை ஊழியர்களின் விரைவான மிடுக்கான சேவையும் ‘வாடிக்கையாளர்களுக்கு’ கிடைக்கும். ‘என்ன இருந்தாலும் தனியார் சர்வீஸ் மாதிரி வராது சார்’ என்று நாம் விதந்தோதும் சேவை தண்ணீர் துறையிலும் கிடைக்க ஆரம்பித்து விடும். ‘தரமான தனியார்’ தண்ணீர் ஏழைகளுக்கும் கிடைக்கச் செய்ய 2020-ல் ‘தளபதி தண்ணீர் திட்டம்’ (கலைஞர் காப்பீட்டுத் திட்டம் போல) செயல்படுத்தப்படும் என்றும் எதிர்பார்க்கலாம்.
குடிமக்கள் முழுக்க முழுக்க ‘வாடிக்கையாளராக’ மாற்றப்படுவதுதான் உலகமயம்-தனியார் மயம்-தாராளமயத்தின் இறுதி நோக்கம்.
ஒரு ‘மாதிரி நுகர்வோர்’ அப்பழுக்கற்ற சுயநலவாதி – பொருளாதார மனிதர். ‘நான்’ என்ற மன பிம்பத்திலிருந்து உலகைப் பார்ப்பவர் அவர். தனது “விருப்பங்களை பூர்த்தி செய்வதன் மதிப்பை அதிகரிக்க” விளைவதுதான் அவரது உலகப்பார்வை. மதிப்பு என்பது விலையால் தீர்மானிக்கப்படுகிறது. பொருள் அல்லது சேவையை விற்க முயல்பவர் கற்பனை, ஏமாற்று அல்லது பொய்யைக் கூடச் சொல்லி பொருளை அதிக விலைக்கு விற்று விட்டால் நுகர்வோர் அதிக மதிப்பை பெற்று விடுகிறார். சக மாணவனை தன்னுடன் நடனமாட வைக்கும் குளோஸ்அப் பற்பசை, அக்பரின் மகன் ஜஹாங்கீர் என்று நினைவில் வைத்துக் கொள்ள உதவும் காம்ப்ளான் ஊட்டச் சத்து பானம், கல்லூரிக்குள் நுழையும் போது எல்லா மாணவரையும் முகத்தின் சிகப்பழகில் மயங்கச் செய்யும் சிகப்பழகு கிரீம் போன்றவை அத்தகைய ‘மதிப்பை’ வாங்குவோருக்கு அளிக்கின்றன.
ஒரு ‘மாதிரி குடிமகன்’ சமூகக் கண்ணோட்டத்தை கொண்டிருக்கிறார். கூட்டான சமூக வாழ்வில் ஈடுபட்டுள்ள சமமான பலரில் ஒருவராக தன்னை உணர்கிறார்.  தனது மற்றும் பிறரது கடமைகளையும் உரிமைகளையும் அவர் அங்கீகரிக்கிறார். இந்த மதிப்பீடுகள் பொருட்களின் விலையுடன் தொடர்பு கொண்டிருக்கவில்லை.
ஒரு நுகர்வோரின் அடிப்படை உணர்வு ‘எனக்கு வேண்டும்’ என்பது, ஒரு குடிமகனின் அடிப்படை உணர்வு ‘நமக்குத் தேவை’ என்பது. முதலாளித்துவ பொருளாதார அமைப்பில் ஒவ்வொரு மனிதரும் ஒரு பகுதி குடிமகனாகவும், ஒரு பகுதி நுகர்வோராகவும் செயல்பட்டு வருகிறார்கள். இதில் நுகர்வோரின் பங்கை அதிகமாகிக் கொண்டே போவதுதான்  பொருளாதார ‘வளர்ச்சி’யின் சூத்திரம்.
‘நமது நாடு நமதில்லை, நாம் நாட்டின் குடிமக்கள் இல்லை, நாம் அனைவரும் வணிக நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள்’ என்று மாற்றி விடுவதுதான் முதலாளித்துவ அமைப்பின் இறுதி இலக்கு.
ரிலையன்ஸ் இந்தியாவில், ரிலையன்ஸ் வாடிக்கையாளர்கள், ரிலையன்ஸ் நீர் குடித்து, ரிலையன்ஸ் பிரஸ்ஸில் பல் விளக்கி, ரிலையன்ஸ் அடுப்பில், ரிலையன்ஸ் குக்கரில் சமைத்து, ரிலையன்ஸ் டி.வி பார்த்து, ரிலையன்ஸ் செல்பேசியில் பேசி, நோய் வந்தால் ரிலையன்ஸ் மருந்து சாப்பிட்டு, இறந்தால் ரிலையன்ஸ் மயானத்தில் எரிக்கப்பட்டு……..இதுதான் குடிமக்கள் வாடிக்கையாளர்களாக மாறும் நிலை.
அப்படி மாற்றப்பட்டால் நாம் அடிமைகள் என்பதையும், நமது உயிர் வாழ்தலின் பாக்கியமே அவர்கள் அருளும் பிச்சை என்பதையும், இந்த பிச்சை பெரும்பாலான மக்களை சராசரி வாழ்விலிருந்து தூக்கி ஏறியும் என்பதையும் புரிந்து கொண்டால், நீங்கள் வாடிக்கையாளர் எனும் அடிமைத்தனத்தை எதிர்த்து போராட வரலாம். குடிமக்கள் என்ற தகுதியையும் தக்க வைத்துக் கொள்ளலாம். என்ன சொல்கிறீர்கள்?
__________________________________________
- அப்துல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக