புதன், பிப்ரவரி 01, 2012

திராணி இருந்தால் சங்கரன்கோவிலில் தனித்து நின்று பாருங்கள்- விஜய்காந்துக்கு ஜெ. ஆவேச சவால் !

 சென்னை சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறாம். உங்களுக்குத் திராணி இருந்தால் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள். நாங்கள் அங்கு மகத்தான வெற்றியை பெறப் போகிறோம். உங்களால் முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என்று தேமுதிகவுக்கு இன்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் பகிரங்கமாக சவால் விடுத்தார். ஜெயலலிதா விடுத்த இந்த பகிரங்க சவால் மூலம் அதிமுக- தேமுதிக இடையிலான உறவும், நட்பும், கூட்டணியும் அதிகாரப்பூர்வமாக தவிடுபொடியாகியுள்ளது.

சட்டசபையில் நேற்றே தேமுதிகவுக்கும், அதிமுகவுக்கும் இடையே லடாய் தொடங்கி விட்டது. தேமுதிக துணைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து புகார் கூறி பேசியதற்கு முதல்வர் ஜெயலலிதா உடனடியாக சூடான பதில் கொடுத்தார்.

இந்த நிலையில் இன்று மீண்டும் பிரச்சினை வெடித்தது. தேர்தல் தொடர்பாக தேமுதிகவினர் பேசியதால் பெரும் அமளி துமளி வெடித்தது. அதிமுகவினருக்கும், தேமுதிகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இரு தரப்பினரும் கைகளை நீட்டியபடி பேசினர்.

அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா ஆவேசமாகப் பேசினார். அவர் கூறுகையில், தானே புயல் நிவாரணப் பணிகள் குறித்து நான் பலமுறை விளக்கம் அளித்து விட்டேன். அதற்குப் பிறகும் அரசைக் குறை கூறிப் பேசி வருகிறார்கள் தேமுதிக உறுப்பினர்கள்.

இப்போதுசொல்கிறேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்திய பிறகு, பால் விலையை உயர்ததிய பிறகு வரும் சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் நாங்கள் தனித்து நிற்கப் போகிறோம். உங்களுக்குத் திராணி இருந்தால் நீங்களும் தனித்து வேட்பாளரை நிறுத்துங்கள்.

நாங்கள் அடையப் போகிற மகத்தான வெற்றியை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்ககள். உங்களால் தடுக்க முடியுமா என்பதை யோசித்துப் பேசுங்கள் என்று ஆவேசமாக பேசியபடி சவால் விடுத்தார் ஜெயலலிதா.

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை நேருக்கு நேர் பார்த்தபடி பேசினார் ஜெயலலிதா. அப்போது விஜயகாந்த் அமைதியாக ஜெயலலிதாவைப் பார்த்தபடி இருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக