சென்னை: ஆளுங்கட்சி எம்எல்ஏக்களைப் பார்த்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரலைக் காட்டி சைகை செய்தது குறித்து உரிமை மீறல் குழுவின் பரிசீலனைக்கு உத்தரவிட்டுள்ளார் சபாநாயகர் ஜெயக்குமார். தமிழக சட்டசபை இன்றுஅல்லோகல்லப்பட்டு விட்டது. தங்களைப் பேச விடாமல் தடுப்பதாக தேமுதிகவினரும், அவர்கள் அரசை தேவையில்லாமல் விமர்சிப்பதாக அதிமுக உறுப்பினர்களும் கடும் வாக்குவாதத்தில் இறங்கினர். இதன் விளைவாக விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிக உறுப்பினர்கள் கூண்டோடு வெளியேற்றப்பட்டனர்.
இந்த நிலையில் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் மீது உரிமை மீறல் பிரச்சினை கிளப்பப்பட்டுள்ளது. அவர் சூடான வாக்குவாதத்தின்போது ஆளுங்கட்சி உறுப்பினர்களை நோக்கி விரல்களை நீட்டியபடி பேசியதாக தெரிகிறது. விரல்களை சைகை காட்டியபடி அவர் பேசிய விவகாரத்தை உரிமை மீறல் குழுவுக்கு சபாநாயகர் ஜெயக்குமார் அனுப்பி வைத்துள்ளார்.
சமீபத்தில்தான் திமுக உறுப்பினரும், முன்னாள் மத்திய அமைச்சர் டிஆர் பாலுவின் மகனுமான ராஜாவை உரிமை மீறல் பிரச்சினை தொடர்பாக சஸ்பெண்ட் செய்தார் சபாநாயகர். அதே பாணியில் தற்போது விஜயகாந்த் மீதும் தடை நடவடிக்கை பாயலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக