லஞ்சம் வாங்கி சொத்துக்களை குவித்த அரசு ஊழியர்கள் ஓய்வு பெற்ற பின்பு, அவர்களது சொத்துக்களை பறிமுதல் செய்ய வழிசெய்யும் விதிமுறைகளை அரசு உருவாக்கியுள்ளது.
அரசு துறைகளில் தலைமை முதல் அடிமட்டம் வரை லஞ்சம் பரவி கிடக்கிறது. இதை தடுக்க சி.பி.ஐ., விஜிலென்ஸ் என எத்தனை அமைப்புகளை கண்காணிக்க செய்தாலும் ஊழல் முடிவுக்கு வந்தபாடில்லை. எனவே, ஊழல் செய்யும்
அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும், இதற்கு ஏற்ப லோக்பால் மசோதா கொண்டு வர வேண்டும், என அன்னா ஹசாரே குழுவினர் போராடி வந்தனர்.
லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்து, அந்த பணத்தில் பள்ளிகளை கட்டும் திட்டத்தை, பீகார் அரசு ஏற்கனவே அமல்படுத்தி நடைமுறைப்படுத்தியுள்ளது. பணியில் இருக்கும் போது, லஞ்சம் வாங்கி கொழுத்த அதிகாரிகள் ஓய்வு பெற்றதும், அவர் மீதான நடவடிக்கை எடுப்பதில் பல்வேறு சிரமங்கள் உள்ளதாக, சி.பி.ஐ., போன்ற அமைப்புகள் அரசிடம் புகார் தெரிவித்துள்ளன. இதை கருத்தில் கொண்ட மத்திய நிர்வாகத்துறை அமைச்சகம், சட்டத்துறையுடன் இணைந்து புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
பதவியில் இருக்கும் காலத்தில், ஊழல் செய்யும் அதிகாரியை அவர் சம்பந்தப்பட்ட துறையின் அனுமதி பெற்று, அவரின் சொத்துக்கள் பறிமுதல் செய்ய சட்டத்தில் இடம் உள்ளது. ஆனால், ஓய்வு பெற்ற பிறகு எந்த சட்ட பிரிவின் கீழ், அவர் மீது நடவடிக்கை எடுப்பது, எப்படி அவரது சொத்துக்களை பறிமுதல் செய்வது என்பது போன்ற சந்தேகங்களுக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது.
இது குறித்து, மத்திய நிர்வாகத்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஊழலில் ஈடுபடுவோரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய, 1944ம் ஆண்டு கிரிமினல் சட்டம் 3வது சட்டதிருத்த பிரிவு வழி செய்கிறது. ஆனால், ஊழல்புகார் வழக்கு நிலுவையில் இருந்தாலோ, சம்பந்தப்பட்ட ஊழியர் ஓய்வு பெற்றாலோ அவரது சொத்தை பறிமுதல் செய்ய இந்த சட்டத்தில் வழி சொல்லப்படவில்லை.
பணியில் இருந்த போது செய்த ஊழலால் பணி நீக்கம் செய்யப்பட்டவரின் வழக்கு, நிலுவையில் இருக்கும் பட்சத்தில் அவர் மீதான சொத்துக்களை பறிமுதல் செய்ய, 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 19(1) பிரிவின் கீழ், அரசே நடவடிக்கை எடுக்கலாம். லஞ்சம் வாங்கிய நபர், மத்திய அரசின் ஆளுகைக்கு கீழ் வராத பட்சத்தில், பணி புரிந்த நபர் சார்ந்த துறையின் அமைச்சகமே, சொத்துக்களை பறிமுதல் செய்ய விண்ணப்பிக்கலாம்.
ஊழல் தடுப்பு சட்டத்தின் 19வது பிரிவின் 7, 10,11, 13, 15 ஆகிய உட்பிரிவுகளின் படி, தண்டிப்பது சுலபம் அல்ல.ஏனெனில் அதிகாரி மீதான புகாருக்கு முன் அனுமதி பெற்றிருந்தால் தான் தண்டிக்க முடியும். ஆகவே, அடிக்கடி வரும் புகார்களை சந்தித்து ஊழலைக் குறைக்க, பணியில் இருந்தாலும், ஓய்வு பெற்றாலும் அந்த அதிகாரிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்வது குறித்து, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளோம், இவ்வாறு நிர்வாகத்துறை அமைச்சகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக