சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்திருப்பதாக சிபிஐ இயக்குனர் கூறியதற்கு சுவிட்சர்லாந்து தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் முதலீடு செய்துள்ள கருப்பு பணத்தின் அளவு குறித்து நாட்டில் பல்வேறு தகவல்கள் கூறப்பட்டு வந்தன. ஆனால், அரசோ, சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகளோ இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த புள்ளி விவரத்தையும் கூறாமல் இருந்து வந்தன. இந்நிலையில், டெல்லியில் கடந்த 13ம் தேதி நடைபெற்ற சர்வதேச மாநாட்டில் பேசிய சிபிஐ இயக்குனர் ஏ.பி.சிங், ‘வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்கள் ரூ.25 லட்சம் கோடி கருப்பு பணத்தை முதலீடு செய்துள்ளனர். குறிப்பாக, சுவிட்சர்லாந்து நாட்டு வங்கிகளில் அதிகளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளது’ என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனால், இந்த புள்ளி விவரம் எந்த அடிப்படையில் கூறப்பட்டது என்பதை கூற அவர் மறுத்து விட்டார்.
கருப்பு பணம் பற்றி சிபிஐ இயக்குனரே இந்த புள்ளி விவரத்தை கூறியதால், அதுதான் உண்மை நிலவரமாக இருக்கும் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சிங்கின் இந்த கருத்தை இந்தியாவுக்கான சுவிட்சர்லாந்து தூதரகம் மறுத்துள்ளது. வழக்கத்துக்கு மாறாக நேற்று அது வெளியிட்ட அறிக்கையில், ‘சுவிட்சர்லாந்து மற்றும் சுவிஸ் வங்கிகளில் இந்தியர்கள் செய்துள்ள முதலீடு பற்றி பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியான நிரூபிக்க முடியாத தகவல் பற்றி விளக்கம் அளிக்க சுவிட்சர்லாந்து தூதரகம் விரும்புகிறது. செய்தியில் கூறப்பட்டுள்ள புள்ளி விவரத்துக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக