வியாழன், பிப்ரவரி 02, 2012

அமெரிக்காவிடம் கையேந்தும் ஆசியா: ஒபாமா தம்பட்டம் !

தங்களை மேம்படுத்தவும், சீனாவிடம் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், ஆசிய நாடுகள் அமெரிக்காவின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருப்பதாக, அமெரிக்க அதிபர் ஒபாமா கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நடந்த தேர்தல் பிரசார நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒபாமா கூறியதாவது: கடந்த மூன்றாண்டுகளில், நாம் அனேக பிரச்னைகளைக் கடந்து வந்து விட்டோம்.

அதே காலகட்டத்தில், நான் உலகம் முழுவதும் சுற்றிப் பார்த்தபின், ஒன்றைத் தெரிந்து கொண்டேன். அது, உலகம் இன்னும் நமது தலைமையை எதிர்பார்த்திருப்பது தான்.
நம்மிடம் உள்ள அதிகாரத்திற்காக, அவர்கள் நம்மை எதிர்பார்க்கின்றனர். ஆசியாவில், சீனாவின் வளர்ச்சியை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.
அவர்களின் பொருளாதார எதிர்காலம், நம்மோடு மட்டுமல்ல, அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சீனாவோடும் தொடர்பு கொண்டிருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர்.
அதனால், ஆசியாவின் அச்சிறிய நாடுகள், தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், தங்களின் இயற்கை வளங்கள் சுரண்டப்படாமல் முறையாக மேம்படுத்தவும் விரும்புகின்றனர். அதனால், அவர்கள் நம்மை விரும்புகின்றனர். இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
பலவீனமாக்கிய ஒபாமா: எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில், அதிபர் வேட்பாளராக போட்டியிடும் மிட் ரோம்னி, நேற்று தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசிய போது, "வெளிநாடுகளைத் திருப்திப்படுத்தும், அந்நாடுகளிடம் மன்னிப்புக் கேட்கும் வெளியுறவுக் கொள்கையைத் தான், ஒபாமா பின்பற்றுகிறார். அவர், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையை பலவீனமாக்கிவிட்டார்' எனக் குற்றம் சாட்டினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக