ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது. இத்தகவலை அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நூலண்ட் தெரிவித்தார். சர்வதேச எதிர்ப்பையும் மீறி அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபட்டுள்ளது. இதைக் கண்டிக்கும் வகையில் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ஈரான் மீது சர்வதேச தடைகளை விதித்து வருகிறது.
ஆனால் அமெரிக்காவுடன் நட்பாக இருக்கும் இந்தியா, ஈரானிடமிருந்து அதிக அளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்கிறது. இதைக் குறைத்துக் கொள்ளும்படி இந்தியாவை அமெரிக்கா தொடர்ந்து நிர்பந்தித்து வருகிறது.
இந்தியாவின் கச்சா எண்ணெய் தேவையில் 20 சதவீதம் ஈரான் மூலம் நிறைவேறி வருவதாகவும், அதைக் குறைக்க முடியாது என்றும் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் வாஷிங்டனில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுச் செயலர் ரஞ்சன் மத்தாயிடம் இதுகுறித்து பேசப்பட்டது. அப்போது அமெரிக்காவின் நட்பு நாடுகளிடம், ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதியை படிப்படியாகக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் டிசம்பர் 29-ம் தேதி அதிபர் ஒபாமா கையெழுத்திட்ட கடிதத்தில், கச்சா எண்ணெய் இறக்குமதியில் ஈரானைச் சார்ந்திருப்பதைக் குறைத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டிருந்தது.
ஈரானிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யாமல் அதைத் தவிர்ப்பது எப்படி? என்பது குறித்து தில்லியுடன் பேச்சு நடத்தப்பட்டதாக நூலண்ட் தெரிவித்தார். ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யும் எண்ணெய்க்கு மாற்று கண்டுபிடிக்கும்படி நட்பு நாடுகளிடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அணு ஆயுத தயாரிப்பைக் கைவிட்டு, சர்வதேச சட்டதிட்டங்களின் கீழ் ஈரானையும் கொண்டு வர முடியும் என்று அமெரிக்கா கருதுகிறது.
180 நாள்களுக்குள் அதாவது 6 மாதங்களுக்குள் எண்ணெய் இறக்குமதி தொடர்பாக மாற்று வழிகளைக் கண்டுபிடிக்குமாறு நட்பு நாடுகளை அமெரிக்க அதிபர் ஒபாமா தனது கடிதத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.
ஒவ்வொரு நாடும் எந்தெந்த பணிகளுக்காக ஈரானை சார்ந்துள்ளது என்று தரம்பிரித்து அதனடிப்படையில் ஈரானை சார்ந்திருப்பதிலிருந்து விலகி இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். எனவே ஒவ்வொரு நாடும் அதன் செயல்பாடு அடிப்படையில் தரம் பிரிக்கப்படும் என்றார் நூலண்ட்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக