சிரியா நாட்டு ராணுவம் நேற்று (வியாழக்கிழமை) தமது கட்டுப்பாட்டில் இருந்த நகரம் ஒன்றைக் கைவிட்டுப் பின்வாங்கியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டக்காரர்களின் தாக்குதல்களை சமாளிக்க முடியாமல், ராணுவம் இந்த முடிவை எடுக்க நேர்ந்தது. ராணுவத்தினர் சராமாரியாகச் சுட்டபடி, நகருக்குள் நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களில் பின்வாங்கிச் சென்றனர்.அரசுக்கு எதிராக யுத்தம் புரியும் போராளி அமைப்பு, தமது வெற்றியை அறிவித்துள்ளது. தமது ராணுவம் பின்வாங்க நேர்ந்தது குறித்து சிரிய அரசு இதுவரை வாய்திறக்கவில்லை.
கடந்த சில தினங்களாக இரு தரப்புக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருந்த ஜபாதானி நகரமே ராணுவத்தின் கையைவிட்டு போயிருக்கின்றது. சிரிய அரசுக்கு இதிலுள்ள ஆபத்தான விஷயம், ஜபாதானி நகரம் தலைநகர் டமாஸ்ஸில் இருந்து அதிக தொலைவில் இல்லை. (வெறும் 30 கி.மீ. மட்டுமே)
இந்த நகரத்தைக் கைப்பற்றியுள்ள அரசு எதிர்ப்பாளர்கள், அருகில் உள்ள தலைநகரை குறிவைக்க நிச்சயம் திட்டமிடுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
ஜபதானி ஒரு மலை நகரம். நகரைச் சூழவும் மலைகள் இருப்பது யுத்தத்தில் அரசு எதிர்ப்பாளர்களுக்கே சாதகமாக முடிந்திருக்கிறது. காரணம், சிரிய ராணுவத்தின் பிரதான தாக்குதல் ஆயுதம் டாங்கிகள்தான். நகரைச் சூழவும் டாங்கிகளை அவர்கள் நிறுத்தி வைத்திருந்த போதிலும், மலைகள் ஜபதானி நகருக்கு இயற்கைப் பாதுகாப்பைக் கொடுத்தன.
ராணுவத்துக்கு ஏற்பட்ட அடுத்த சிக்கல், ஆயுதம் ஏந்திய போராட்டக்காரர்களில் பெருமளவு முன்னாள் ராணுவத்தினர் உள்ளனர். ராணுவத்தில் இருந்து வெளியேறி, அரசுக்கு எதிரான போராளிகளுடன் இணைந்துள்ள இவர்களுக்கு ராணுவத்தினரின் பலம், பலவீனம் மற்றும் தாக்குதல் முறைகள் அனைத்தும அத்துப்படி. இது போதாதென்று, அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களும், சிரிய ராணுவத்திடமிருந்து ‘சுட்ட’ ஆயுதங்களே!
கடந்த 6 தினங்களாக இந்தப் பகுதியில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான யுத்தம் நடைபெற்றது. போராளிகள் தரப்பின் ஃபயர்-பவர் ராணுவத்தை திகைக்க வைத்தது. போராளிகளிடம் ஆயுதங்கள் இருப்பது ராணுவத்துக்கு தெரியும் என்றாலும், அவர்களிடம் பெருந்தொகை வெடிப் பொருட்கள் கையிருப்பில் இருக்கும் என்பதை ராணுவம் எதிர்பார்க்கவில்லை.
இதற்குள், உளவுத்துறை வட்டாரங்களில் மற்றொரு தகவலும் அடிபடுகிறது.
மேற்கு நாட்டு உளவுத்துறை ஒன்று, சிரியாவுக்கு அருகில் உள்ள நேச நாடு ஒன்றின் ஊடாக போராளிகளுக்கு வெடிப்பொருட்களை சப்ளை செய்தது என்பதே அந்தத் தகவல். வெடிப்பொருட்கள் சப்ளையில் துப்பாக்கி ரவுன்ட்ஸ்கள், மோட்டார் ஷெல்கள், கிரானைட் ராக்கெட்டுகள் மற்றும், ஷார்ட் ரேஞ்ச் ஏவுகணைகள் (பெரும்பாலும், தோளில் வைத்து இயக்கப்படும் லோஞ்சர்களுக்கானது) பெட்டி பெட்டியாக இருந்ததாக உளவு வட்டாரங்களில் சொல்கிறார்கள்.
அநேகமாக இதில் உண்மை இருக்கலாம்.
ராணுவத்தை ஒரு நகரில் இருந்து பின்வாங்க வைப்பதற்கு தேவையான ஃபயரிங்-பவர் இதற்குமுன் போராளி அமைப்பினரிடம் இருக்கவில்லை. திடீரென அவர்களது கைகளில் ராணுவத்துக்குச் சமமாக யுத்தம் புரிவதற்கும், ராணுவத்தை பின்வாங்க வைப்பதற்கும் தேவையான ஃபயரிங்-பவர் கிடைத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக