வெள்ளி, மார்ச் 08, 2013

சேது சமுத்திர திட்டத்தை சீரழிக்க நினைப்பது நியாயமா? பா.ஜ.க.வுக்கு கருணாநிதி கேள்வி !!

சேது சமுத்திரத் திட்டத்துக்கு பல கோடி ரூபாய் செலவிட்டு, பெருமளவு பணிகள் முடிந்த நிலையில், அந்த திட்டத்தை சீரழிக்க நினைப்பது நியாயமா என்று தி.மு.க தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

‘‘சேது சமுத்திர திட்டத்தின் பெயரால் ராமர் பாலத்துக்கு சேதம் விளைவிக்க மத்திய அரசு முயற்சித்தால் அதை பா.ஜ.க. கடுமையாக எதிர்க்கும் என்றும், ராமர் பாலத்தை சேதப்படுத்தும் எந்த நடவடிக்கையையும் பா.ஜ.க. ஏற்காது என்றும், ராமர் பாலம் இல்லாமல் ராமாயணம் கிடையாது என்றும், இந்தியாவின் அடையாளமும் முழுமையாகாது என்றும்; அந்தக்கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில் 3.3.2013 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் அந்த கூட்டத்தில், ‘‘ராமர் பாலத்தை தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாக அறிவிக்க தமிழக அரசு அளித்து வரும் ஒத்துழைப்பை பா.ஜ.க. பாராட்டுகிறது’’ என்றும் தீர்மானம் கூறுகிறது.

1955ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை நடத்தப்பட்ட எல்லா ஆய்வுகளும்; தொழில்நுட்ப ரீதியாக சேது சமுத்திர திட்டம் சாத்தியமானதுதான் என்றே நிரூபித்திருக்கின்றன. புதிய ஆய்வுகளை மேற்கொள்வதற்கு, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் தரைவழிப்போக்குவரத்துத்துறை மந்திரி, பா.ஜ.க.வை சேர்ந்த அருண் ஜெட்லி, 9.3.2001 அன்று ஒப்புதல் அளித்துள்ளார். இந்த ஆய்வுப்பொறுப்பு, 2001 அக்டோபரில் ‘நீரி’ நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நாகபுரியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ‘நீரி’ என்ற சுற்றுச்சூழல் ஆய்வு மையம் அதனை ஆய்வு செய்து, எந்தக்கேடும் வராத, குறைந்த செலவில் பயணம் செய்ய ஏற்ற, சிறந்த தடம் ஆறாம் வழித்தடமான, ‘‘ஆதாம் பாலம்’’ பகுதியில் அமைவதுதான் என்று கூறிவிட்டது.

இவ்வாறு கால்வாய் அமைய வேண்டிய வழித்தடம் மற்றும் விரிவான செயல்முறைகள் வாஜ்பாய் தலைமையிலான பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி அரசினால் பரிசீலிக்கப்பட்டு, 6வது எண் பாதை, அதாவது ஆதாம் பாலம் வழியிலான பாதை என முடிவு செய்யப்பட்டது. இப்படி பா.ஜ.க.வினரே இந்த பாதைக்கு அன்றே ஒப்புதல் தந்துவிட்டு, தற்போது ‘‘ராமர் பாலம்’’ என்று எதிர்ப்புத்தெரிவிக்கிறார்கள்.

பா.ஜ.க.வினர், இன்று ‘‘ராமர் பாலம்’’ என்று கூச்சல் கிளப்பி, இத்திட்டத்தை கிடப்பில் போட முயற்சி செய்கின்றனர். இதே பா.ஜ.க. ஆட்சியில் இருந்த கப்பல் துறை அமைச்சர்கள் கையொப்பமிட்டுத்தான், நன்கு ஆராய்ந்த பின்னரே, மற்ற வழி தடங்களைவிட இதுவே எளிதானது–சிக்கனமானது – விரைந்து செய்யக்கூடியது – என்று உறுதி செய்துள்ளனர். இதை பா.ஜ.க.வினர் மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

9.3.2001ல் அமைச்சர் அருண் ஜெட்லி; 25.10.2002ல் அமைச்சர் எஸ்.திருநாவுக்கரசர்; 29.10.2002ல் அமைச்சர் வி.வி.கோயல்; அதற்கு முன் அமைச்சர் சத்ருகன் சின்கா ஆகியோர் ‘‘ஆதாம் பாலம்’’ வழியிலான 6வது எண் வழித்தடத்தை ஏற்றுக்கொண்டுள்ளனர்.

1963ஆம் ஆண்டு செப்டம்பர் 12ஆம் நாள், பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக இருந்தபோது, பண்டித நேருவின் அமைச்சரவைக் கூட்டத்தில், சேது திட்டத்தை நான்காவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முன் நடவடிக்கை பட்டியலில் சேர்த்துக்கொள்வதென்று முடிவு செய்யப்பட்டது. 

10.5.1986 அன்று எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோது சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்று கோரி, ஒரு தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. 15.9.1998 அன்று சென்னையில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட பிரதமர் வாஜ்பாய் ‘‘அறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில், நான் அறிவிக்க விரும்புகிறேன்; சேது சமுத்திரத்திட்டத்தை இந்த அரசு விரைவில் நிறைவேற்றும்’’ என்று பா.ஜ.க. பிரதமர் வாஜ்பாய் அளித்த வாக்குறுதியையே மீறுகின்ற வகையில், பா.ஜ.க. தேசிய கவுன்சில் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது, வாஜ்பாய்க்கே செய்கின்ற துரோகம் அல்லவா?.

நான் குறிப்பிட்டுள்ள இந்த கால கட்டங்களில் ‘‘ஆடம்ஸ் பாலம்’’ என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறதே தவிர ‘‘ராமர் பாலம்’’ என்று எந்தக்குறிப்பும் கிடையாது. மேலும் அந்த ‘‘ஆடம்ஸ் பாலத்தை’’ அகற்றிவிட்டு, சேதுத்திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்றுதான் வலியுறுத்தப்பட்டிருக்கிறதே தவிர, புதிய பிரச்சினை எதுவும் பகுத்தறிவு பூர்வமான நிலையிலே எழுப்பப்படவில்லை.

2005ஆம் ஆண்டு ஜூலை திங்களில் அடிக்கல் நாட்டப்பட்டு 2 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில், சேதுக்கால்வாய் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்பட்டு, பெருமளவு பணிகள் முடிவுற்ற நிலையில் திடீரென்று புதியதாக ஒரு காரணத்தைக்கூறி செந்தமிழ் நாட்டுக்கு செழிப்பும் சிறப்பும் தரவல்ல ஒரு மாபெரும் திட்டத்தை மனம்போன போக்கில் சீரழிக்க நினைக்கிறார்களே, இது நியாயமா என்பதுதான்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக