நெல்லை: கூடங்குளம் அணு உலை எதிர்ப்புக் குழுவினரின் நிலம் மற்றும் கடல் வழி முற்றுகைப் போராட்டம் காரணமாக கூடங்குளத்தில் 144 தடை உத்தரவு பி்றப்பிக்கப்பட்டுள்ளது. அங்கு 4000 போலீஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டம், கூடங்குளத்தில் ரூ.13,500 கோடி மதிப்பீட்டில் தலா 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுள்ள இரண்டு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதல் அணு உலையில் விரைவில் மின் உற்பத்தியை தொடங்க பணிகள் நடந்தன. கடந்த செப்டம்பர் 19ம் தேதி முதல் அணு உலையில் யுரேனியம் எரிபொருள் நிரப்பும் பணிகள் துவங்கின. 2 வாரங்கள் நடந்த இந்தப் பணி அக்டோபர் 2ம் தேதி நிறைவு பெற்றது.
இதையடுத்து இந்திய அணுசக்தி ஒழுங்கு முறை வாரிய அதிகாரிகள் கூடங்குளத்தில் பல்வேறு கட்ட ஆய்வு மேற்கொணடனர். எனினும் பல காரணங்களால் கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி துவங்குவது தாமதமாகிறது. போராட்டக் குழுவினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கூடங்குளம் அணுமின் நிலைய முதல் அணுஉலையில் கசிவு ஏற்பட்டதாக கூறப்படுவது குறித்து மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர். வெள்ளை அறிக்கை வெளியிடாததால், அரசை கண்டித்து கூடங்குளம் அணு உலையை போராட்டக் குழுவினர் கடல் மற்றும் தரை மார்க்கமாக இன்று முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
போராட்டக்குழுவிற்கு ஆதரவாக தூத்துக்குடியிலும், கன்னியாகுமரியிலும் மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்க செல்வதில்லை என முடிவு செய்துள்ளனர். அணுஉலையை மூடக்கோரி தூத்துக்குடி பனிமயமாதா ஆலய வளாகத்தில் உண்ணாவிரதம் நடக்கிறது. குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களிலும் அணுஉலைக்கு எதிரான போராட்டங்கள் இன்று நடத்தப்பட உள்ளன. இதையொட்டி 3 மாவட்டங்களிலும் போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே கூடங்குளம் அணுஉலை பகுதியில் பாதுகாப்பில் இருக்கும் 1500 போலீசார் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து சுமார் 2,500 போலீசார் என மொத்தம் 4 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சைலேந்திரபாபு தலைமையில் கூடுதல் டிஜிபி சைலேந்திரபாபு தலைமையில் கடலோர காவல் படையினர் மற்றும் மத்திய, மாநில உளவு துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு படையை சேர்ந்த விமானம் மற்றும் ஹெலிகாப்டர் ஆகியவை கூடங்குளம் கடல் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. தென் மண்டல ஐஜி அபய்குமார் சிங் தலைமையில் நெல்லை சரக டிஐஜி சுமித் சரண், எஸ்பிக்கள் நெல்லை விஜயேந்திரபிதரி, தூத்துக்குடி ராஜேந்திரன், கன்னியாகுமரி மணிவண்ணன் ஆகியோர் கூடங்குளத்தில் முகாமிட்டு நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.
144 தடை உத்தரவு இந்தநிலையில் கூடங்குளம் பகுதியில் 144 தடை உத்தரவைப் பிறப்பித்து மாவட்ட ஆட்சித் தலைவர் சமயமூ்ர்த்தி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தற்போதுள்ள சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு, மாவட்ட எஸ்.பியின் அறிக்கையின்படி மார்ச் 10ம் தேதி மாலை 6 மணி முதல் ஏப்ரல் 9ம் தேதி வரை கூடங்குளத்தை சுற்றியுள்ள 7 கி.மீ. பகுதிகளில் (கடல் மற்றும் நில மார்க்கம்) 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. போராட்டக்குழுவினரும், அவர்களுக்கு உதவி செய்வோரும், அணுமின் நிலையத்திற்கு எதிரான கருத்துடையோரும் போராட்டத்தை தூண்டிவிடும் அரசியல் கட்சிகள், அமைப்புகள், இயக்கங்களை சேர்ந்தோரும் எவ்வித சட்ட விரோதமான செயல்களிலும் இறங்க கூடாது என்பதற்காக இந்த தடையாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முற்றுகைப் போராட்டம் காரணமாக கூடங்குளம் மற்றும் சுற்றுப் பகுதிகளில் பரபரப்பு நிலவுகிறது.
1
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக