புதன், ஆகஸ்ட் 08, 2012

அணிசேரா நாடுகள் மாநாடு: பிரதமர் மன்மோகன் ஈரான் செல்கிறார்! ஈரான்-பாக். அதிபர்களுடன் பேச்சுவார்த்தை !

Manmohan, Zardari to meet in Iran during NAM summitபுதுடெல்லி:அணிசேரா இயக்க நாடுகளின் 16-வது உச்சிமாநாட்டில் பங்கேற்க பிரதமர் மன்மோகன்சிங் இம்மாதம் 29-ஆம் தேதி ஈரானுக்கு செல்ல உள்ளார். ஈரான் அதிபர் அஹ்மத் நஜாத் மற்றும் பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரி ஆகியோருடன் அவர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஈரானில் ஆகஸ்ட் 29-ம் தேதி அணி சேரா நாடுகள் இயக்கத்தின் 16-வது மாநாடு நடைபெறுகிறது. இந்த
இயக்கத்தில் 120 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன.
கடந்த மே மாதம் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாநாட்டில் கலந்துகொள்ளுமாறு ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மத் நஜாத் வேண்டுகோள் விடுத்தார்.
அப்போது, இருநாட்டுக்கும் இடையே பல்வேறு தளங்களில் உறவை பலப்படுத்துவதன் மூலம் முன்னேற்றங்களைக் காண முடியும் எனத் தான் நம்புவதாக அவர் தெரிவித்தார்.
அவரது அழைப்பை ஏற்றுக்கொண்ட மன்மோகன் சிங், “ஈரானுடனான உறவுக்கு இந்தியா மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை மேம்படுத்த வேண்டும்” என்று தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அணி சேரா நாடுகள் இயக்க மாநாட்டையொட்டி ஈரானில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மன்மோகன் சிங், அஹ்மத் நஜாத்தை சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சு நடத்தவுள்ளார்.
ஈரானில் அணு ஆயுதம் தயாரிக்க முயற்சி மேற்கொள்ளப்படுவதாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் குற்றம் சாட்டி வருகின்றன. இது தொடர்பாக தான் கொண்டு வந்த ஈரான் மீதான பொருளாதாரத் தடையை இந்தியா கடைப்பிடிக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தம் அளித்து வருகிறது.
ஈரான் மீது ஐக்கிய நாடுகள் சபை விதித்துள்ள பொருளாதாரத் தடையை மட்டும்தான் கடைப்பிடிப்போம் என்று இந்தியா கூறிவருகிறது.
இந்த நிலையில், ஈரான் அதிபருடனான மன்மோகன் சிங்கின் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவையில் 12 சதவீதத்தை ஈரானிலிருந்துதான் இறக்குமதி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் தங்கியிருக்கும்போது, மாநாட்டில் பங்கேற்க வரும் பாகிஸ்தான் அதிபர் ஆஸிஃப் அலி சர்தாரியை பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து, பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று வெளியுறவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக