புதுடெல்லி:ஸய்யித் நஸிம் அஹ்மத் ஸெய்தி புதிய தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார். இந்திய தேர்தல் கமிஷனில் தலைமைத் தேர்தல் கமிஷனர் ஒருவரும், தேர்தல் கமிஷனர்களாக இரண்டு பேரும் இடம் பெற்றிருப்பர். தலைமைத் தேர்தல் கமிஷனராக இருந்த எஸ்.ஒய். குரைஷி ஓய்வு பெற்ற பின்னர், தேர்தல் கமிஷனர்களில் ஒருவராக இருந்த வி.எஸ். சம்பத்
தலைமைத் தேர்தல் கமிஷனராக தேர்ந்தெடுக்கப்பட்டார். எனவே, காலியாக இருந்த தேர்தல் கமிஷனர் பதவிக்கு, ஸய்யித் நஸீம் அஹ்மத் ஸெய்தி செவ்வாய்க்கிழமை தேர்வு செய்யப்பட்டார்.
மற்றொரு தேர்தல் கமிஷனராக ஹெச்.எஸ். பிரம்மா உள்ளார்.
உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஸெய்தி, கடந்த 1976-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக தேர்வானார். கடந்த ஜூலை 31-ம் தேதி ஓய்வு பெறுவதற்கு முன்னர், விமான போக்குவரத்துத் துறைச் செயலராக இருந்தார். மேலும், இவர் தனது பதவிக் காலத்தில், விமான போக்குவரத்துத் துறையின் தலைமை இயக்குநராகவும் இருந்துள்ளார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து அமைப்பில் இந்தியா சார்பில் நிரந்தர பிரதிநிதியாக கடந்த 2005-2008-ம் ஆண்டு வரை இருந்துள்ளார். முன்னதாக, இந்திய விமான நிலைய ஆணையத்தின் (ஏ.ஏ.ஐ.) இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக