வியாழன், பிப்ரவரி 09, 2012

உ.பி:முக்கிய அரசியல் கட்சிகளுக்கு சவால் விடுக்கும் பீஸ் பார்டி !

Dr. Ayyub Ansari addressing the election rally at Chauri Chaura in Gorakhpur on Wednesdayபுதுடெல்லி:’முஸ்லிம் முதல்வர்’ என்ற முழக்கத்துடன் முக்கிய அரசியல் கட்சிகளுக்கு உ.பி தேர்தல் களத்தில் சவால் விடுத்து வருகிறது பீஸ் பார்டி. இக்கட்சியை டாக்டர். முஹம்மது அய்யூப் என்ற அறுவை சிகிட்சை நிபுணர்  3 ஆண்டுகளுக்கு முன்பு  துவக்கினார். 2008 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இக்கட்சி  முஸ்லிம், தலித்,
பிற்படுத்தப்பட்ட மக்களின் கட்சியாக உ.பி தேர்தல் களத்தில் கறுப்பு குதிரையாக மாறி வருகிறது.
2009 மக்களவை தேர்தலில் 20 வேட்பாளர்களை களமிறக்கிய இக்கட்சி 5,37,638 வாக்குகளை பெற்றது. மக்களவை தேர்தலில் ராகுல் காந்தியால் மீண்ட காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பீஸ் பார்டி அதிர்ச்சியடைய வைத்தது.
2010-ஆம் ஆண்டு 2 சட்டப்பேரவைகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் பீஸ்பார்டி காங்கிரஸ் கட்சியை விட அதிக வாக்குகளை பெற்றது.
தொமரியா கஞ்ச் இடைத் தேர்தலில் 17.69 சதவீத வாக்குகளை பெற்று பீஸ் பார்டி 3-வது இடத்தை பிடித்த வேளையில் காங்கிரஸ் கட்சிக்கு 5-வது இடமே கிடைத்தது.
லகிம்பூர் தொகுதியில் 24,680 வாக்குகளைப் பெற்று பீஸ் பார்டி 2-வது இடத்தை பிடித்தது. 18.36 சதவீத வாக்குகள் இத்தொகுதியில் பீஸ் பார்டிக்கு கிடைத்தது. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கோ 4-வது இடமே கிடைத்தது. அதுமட்டுமல்லாம டிபாசிட் தொகையையும் காங்கிரஸ் இழந்தது. பீஸ் பார்டி பிராமண சமூகத்தைச் சார்ந்த நபரை லகிம்பூரில் களமிறக்கிய பொழுது பாராளுமன்ற உறுப்பினரான ஸஃப்ரி அலி நக்வியின் மகன் ஸைஃப் அலி நக்வியை காங்கிரஸ் களமிறக்கியிருந்தது. ஸஃப்ரி அலியும், ராகுல் குழுவில் முக்கிய நபரான இளைய காங்கிரஸ் எம்.பி ஜிதின் பிரசாத்தும் தேர்தல் பிரச்சாரங்களுக்கு தலைமை வகித்தனர். ஆனாலும், காங்கிரஸ் 4-வது இடத்திற்கு தள்ளப்பட்டது. தற்போதைய சட்டப்பேரவை தேர்தலில் 220 வேட்பாளர்களை பீஸ்பார்டி களமிறக்கியுள்ளது. முஸ்லிம் வாக்குவங்கி மோசடிக்கு எதிராக வலுவான பிரச்சாரத்தை பீஸ்பார்டி நடத்திவருகிறது.
முஸ்லிம்களின் பாதுகாவலனாக தன்னை அறிமுகப்படுத்தும் முலாயம்சிங் யாதவ் பாப்ரி மஸ்ஜிதின் பெயரால் பா.ஜ.கவையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் சுட்டிக்காட்டி அச்சுறுத்தி முஸ்லிம் வாக்குகளை சொந்தமாக்குவதாக டாக்டர்.அய்யூப் கூறுகிறார்.
முலாயம் மற்றும் திக்விஜய்சிங் போல முஸ்லிம் உணர்வுகளை தூண்டும் விதமான பிரச்சாரத்தை தான் நடத்தவில்லை என கூறும் டாக்டர்.அய்யூப் உ.பியில் முஸ்லிம்கள் யாருடனும் விவாதம் புரியக்கூட முடியாத அளவுக்கு பலகீனமாக உள்ளனர். ஆதலால் அவர்களை சுயமாக புனர்நிர்மாணிக்க தாங்கள் முயற்சிப்பதாக அய்யூப் கூறுகிறார்.
பீஸ் பார்டி சில தொகுதிகளில் தங்களின் வெற்றியை பாதிக்கும் என சமாஜ்வாதி கட்சியின் மாநில தலைவர் அகிலேஷ் யாதவ் வெளிப்படையாகவே கூறியுள்ளார். சமாஜ்வாதி கட்சியின் வெற்றி வாய்ப்பை தட்டிப்பறிக்கும் காங்கிரஸ் கட்சியின் டம்மிதான் பீஸ் பார்டி என சமாஜ்வாதி கட்சியின் தலைவர்களில் ஒருவரான அஸம்கான் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக