ஞாயிறு, பிப்ரவரி 12, 2012

முஸ்லிம்களை காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஏமாற்றுகின்றன – ராகுல் காந்தி !

Rahul Gandhi said if people want a change for good in UP, they should vote for Congressசோரான்(உ.பி):முஸ்லிம்களையும், தாழ்த்தப்பட்ட மக்களையும் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஏமாற்றி வருகின்றன என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான பிரச்சாரத்தில் மும்முரமாக ஈடுபட்டிருக்கும் ராகுல்
காந்தி சோரன் பகுதியில் சனிக்கிழமை நடந்த பிரச்சார கூட்டத்தில் பேசினார்.அப்பொழுது அவர் கூறியது:
உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்களும், தாழ்த்தப்பட்டோரும் இன்றும் மிக மோசமான நிலையில் இருப்பதற்கு இப்போதைய மாயாவதி அரசும், முந்தைய சமாஜ்வாதி, பாஜக அரசுகளும்தான் காரணம். அனைத்துக் கட்சியினரும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்வதாகப் பேசி வருகின்றனர். இங்கு சுமார் 70 மாவட்டங்கள் உள்ளன. இதில் எத்தனை மாவட்ட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் நீதிபதியாக உள்ளனர். எத்தனை மாவட்டங்களில் காவல்துறை கண்காணிப்பாளராக தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.
நான் செல்லும் இடங்களில் எல்லாம் தாழ்த்தப்பட்ட மக்களும், ஏழைகளும் என்னிடம் கேட்கும் பொதுவான கேள்வி ஒன்று உள்ளது. நாங்கள் பல தலைமுறையாக கடுமையாக உழைத்தும் எங்கள் வாழ்க்கையில் நிம்மதியில்லை. வறுமையில் இருந்தும், கடனில் இருந்தும் மீள முடியவே இல்லையே அது ஏன்? என்பதுதான் அந்த கேள்வி.
இங்கு பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த 3 கட்சிகளுமே உங்கள் நலனில் அக்கறை காட்டவில்லை என்பதுதான் அதற்குக் காரணம். ஒரு குறிப்பிட்ட 10 சதவீத மக்களின் நலனில்தான் அவர்கள் அக்கறை செலுத்தினர். தாங்களின் வாக்கு வங்கிகள் என்று கருதும் ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும்தான் பகுஜன் சமாஜ், சமாஜ்வாதி, பாஜக ஆகிய கட்சிகள் நன்மை செய்துள்ளன.
பொதுமக்களாகிய உங்களை நான் பெரிதும் மதிக்கிறேன். மற்ற கட்சிகளைப் போல போலியான வாக்குறுதிகளை அளிக்கவில்லை. உங்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில்தான் இங்கு வந்துள்ளேன். நான் கல்லூரியிலும், வெளிநாடுகளிலும் சென்று கற்றதைவிட, ஏழைகளின் வீடுகளில் சென்று தங்கியபோதும், அவர்களிடம் பேசியபோதும் நிறைய தெரிந்துகொண்டேன்.
உத்தரப் பிரதேச மக்களின் உழைப்புதான் டெல்லி மெட்ரோ ரயிலை உருவாக்கியது. பல அண்டை மாநிலங்களில் பெரிய கட்டடங்களும், சாலைகளையும் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பது நீங்கள்தான். ஆனால் உங்களுக்கு வசிக்க நல்ல வீடு இல்லை. இதனை மாற்றத்தான் காங்கிரஸ் உள்ளது.
இங்குள்ள மாயாவதி அரசு கட்டுமான நிறுவன உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டது. ஏழைகளின் நிலங்களை அவர்கள் அபகரித்தனர். எதிர்த்துப் போராடியவர்களை தடியால் அடித்து விரட்டினர். மத்திய அரசு கொண்டு வரும் நல்ல திட்டங்கள் அனைத்தையும் குறை கூறுகின்றனர். மக்களை ஏமாளிகள் என்று நினைத்துத்தான் அவர்கள் இப்படி நடந்து கொள்கின்றனர். மாநிலத்தில் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப் போவதாக சமாஜ்வாதி தலைவர் முலாயம் சிங் யாதவ் கூறியுள்ளார். அவர் 3 முறை இங்கு முதல்வராக இருந்தார். அப்போது ஒரு மின் திட்டத்தைக் கூட கொண்டு வரவில்லை.
காங்கிரஸ் இங்கு எத்தனை தொகுதிகளில் வெற்றி பெரும் என்பதைப் பற்றி நான் அக்கறை செலுத்தவில்லை. உங்கள் வாழ்க்கை நிலையை மாற்ற வேண்டும் என்பதுதான் எனது குறிக்கோள். நீங்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு காங்கிரஸ் உறுப்பினரும் உங்களுக்கான உரிமையைப் பெற்றுத் தரப் போராடுவார் என்று உறுதியளிக்கிறேன்.இவ்வாறு ராகுல் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக