புதுடெல்லி:இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் ஆர்.எஸ்.எஸ்ஸின் பங்கினை வெளிக்கொணர்ந்த மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை பதவி விலக செய்வதற்காக ஆர்.எஸ்.எஸ் நடத்திய முயற்சி நீதிமன்ற தீர்ப்பின் மூலம் தகர்ந்துபோனது. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் குற்றமற்றவர் என சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பு ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்கு பின்னடவை ஏற்படுத்தியுள்ளது. நீதிமன்ற தீர்ப்பு ப.சிதம்பரத்திற்கு பாதகமாக வந்தால் நாடு முழுவதும் தீவிரமான போராட்டங்களை நடத்த ஆர்.எஸ்.எஸ் திட்டம் தீட்டியிருந்தது.
ஹஸாரே குழுவினர், பாபா ராம்தேவின் ஆதரவாளர்கள் ஆகியோரை களமிறக்கி போராட்டம் நடத்துவதற்கு ஆர்.எஸ்.எஸ் திட்டமிட்டு இருந்தது.
சனிக்கிழமை நீதிமன்ற தீர்ப்பு வரும் முன்பே சிதம்பரத்திற்கு எதிராக மனு அளித்த ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியம் சுவாமியும், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்த குரு கோவிந்தாச்சார்யாவும், யோகி பாபா ராம்தேவும் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர். சிதம்பரத்திற்கு எதிராக சுப்ரமணியம் சுவாமி உச்சநீதிமன்றத்திலும், விசாரணை நீதிமன்றத்திலும் மனு அளித்த உடனே பா.ஜ.க சிதம்பரத்தின் ராஜினாமாவை கோரியது. பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இரு அவைகளிலும் ப.சிதம்பரத்தை தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகள் புறக்கணித்தன.
மலேகான், மக்கா மஸ்ஜித், அஜ்மீர், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் ஆகிய குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பங்கினை வெளிக்கொணர்ந்ததன் மூலம் ப.சிதம்பரத்தின் மீது சங்க்பரிவார அமைப்புகளுக்கு பகை உணர்வு அதிகரித்தது. ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத அமைப்பைச் சார்ந்த சுவாமி அஸிமானந்தா உள்ளிட்ட சங்க்பரிவாரத்தை சார்ந்த சிலர் கைது செய்யப்பட்டு குண்டுவெடிப்புகளில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் பங்கு உறுதியானது. இதனைத் தொடர்ந்து இவ்வழக்குகளில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிரபராதிகளான அப்பாவி இளைஞர்கள் சிலர் விடுதலைச் செய்யப்பட்டனர்.
ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் நடத்திய குண்டுவெடிப்புகளை ஒன்றிணைத்து தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியிலேயே மிதவாத ஹிந்துத்துவா தலைவர்கள் ஆகியோரின் எதிர்ப்புகளை புறக்கணித்து ப.சிதம்பரம் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் மீதான விசாரணைக்கு உத்தரவிட்டார். காவி பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கை எடுத்ததுதான் தன்மீதான தனிப்பட்ட தாக்குதலுக்கு காரணம் என ப.சிதம்பரம் கூறியிருந்தார்.
உண்ணாவிரத போராட்டம் நடத்திய பாபா ராம்தேவை நள்ளிரவிலேயே கைது செய்து அப்புறப்படுத்த உத்தரவிட்டதும் மத்திய உள்துறை அமைச்சகமாகும். ராம்லீலா மைதானத்தில் குழப்பம் ஏற்படுத்தி வகுப்புவாத கலவரத்தை நடத்த திட்டமிட்ட ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளின் திட்டம் குறித்த உளவுத்துறையின் அறிக்கையை தொடர்ந்து உள்துறை அமைச்சகம் போலீஸ் நடவடிக்கைக்கு உத்தரவிட்டது. இதன் மூலம் ராம்தேவும் பா.சிதம்பரத்திற்கு எதிராக திரும்பினார்.
சிதம்பரத்திற்கு எதிராக காய்களை நகர்த்தி வந்த சுப்ரமணியம் சுவாமிக்கு ஆதரவு அளித்தது ஆர்.எஸ்.எஸ்ஸும், பாபா ராம்தேவும் ஆவர். சுப்ரமணியம் சுவாமியின் ஜனதா கட்சியை தேசிய ஜனநாயக கூட்டணியில் சேர்க்க பா.ஜ.க தலைமைக்கு ஆர்.எஸ்.எஸ் உத்தரவு பிறப்பித்திருந்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக