அஹ்மதாபாத்:ஸாகியா ஜாஃப்ரி தொடுத்த வழக்கில் சிறப்பு புலனாய்குழு(எஸ்.ஐ.டி) அறிக்கையின் நகல்களை கோரி ஸாக்கியா ஜாஃப்ரி, சமூக ஆர்வலர்களான டீஸ்டா ஸெடல்வாட், முகுல் சின்ஹா ஆகியோர் விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் குறித்து சிறப்பு புலனாய்வு
குழுவுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2002-ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் இனப் படுகொலையின் போது கொடூரமாக கொல்லப்பட்ட காங்கிரஸ் எம்.பி. இஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஸாக்கியா ஜாஃப்ரி. தனது கணவரின் உயிரைக் காக்கத் தவறியதாக முதல்வர் நரேந்திர மோடி, மூத்த அரசியல்வாதிகள் 62 பேர் மற்றும் போலீஸார் மீது குற்றம் சுமத்தியிருந்தார். இதுகுறித்து குஜராத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். அங்கு அவரது மனு நிராகரிக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார், ஸாக்கியா ஜாஃப்ரி. இவரது புகார் குறித்து விசாரிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைக்கும்படி 2009-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, மோடியிடம் இருமுறை விசாரணை நடத்தியது. அதனடிப்படையில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், மோடி மீது குற்றம் சுமத்தப்படுமளவுக்கு ஆதாரம் ஏதுமில்லை என்று தெரிவித்தது. இதன் பின்னர் இந்தப் பிரச்னை குறித்து விசாரிக்க ‘நீதிமன்றத்தின் நண்பராக (அமிகஸ்க்யூரி)’ ராஜு ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்தது. அவர் அளித்த அறிக்கை, சிறப்புப் புலனாய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த பல்வேறு விஷயங்களிலிருந்து வேறுபட்டு இருந்தது. இதன் பின்னரே ஸாக்கியா ஜாஃப்ரியின் மனு குறித்து விசாரிக்கும்படி குஜராத் விசாரணை நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனடிப்படையில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை மேற்கொண்டது. விசாரணையின் அறிக்கையை பிப்ரவரி 8-ம் தேதி விசாரணை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த அறிக்கையில் மோடி மீது குற்றம் ஏதும் சுமத்தப்படவில்லை என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தாலும், அதிகாரபூர்வமாக தகவல்கள் ஏதும் அறிவிக்கப்படவில்லை.
இந்த அறிக்கையின் நகலை தனக்கு அளிக்கும்படி ஸாக்கியா ஜாஃப்ரி வியாழக்கிழமை விசாரணை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். மனுவில் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி விசாரணை நடைபெற்றுள்ளதா என்றும், அறிக்கையின் முடிவு இறுதியானதுதானா என்றும் கேட்டிருந்தார்.
இந்த மனு மீது பிப்ரவரி 13-ம் தேதி விசாரணை நடைபெறும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த ஸாக்கியா ஜாஃப்ரி, பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகளின்படி மோடி மீது குற்றச்சாட்டு ஏதும் சுமத்தப்படவில்லை எனில், அது தனக்கு மிகப்பெரிய ஏமாற்றமாக இருக்கும் என்று தெரிவித்தார்.
சிறப்புப் புலனாய்வு அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த ஜாஃப்ரியின் மகன் தன்வீர் ஜாஃப்ரி, விசாரணை நடத்தும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதே மிகப் பெரிய வெற்றி என்று குறிப்பிட்டார். மேலும் விசாரணை அதிகாரியே நீதிபதியாக செயல்பட்டால் தாங்கள் எதற்கு நீதிமன்றத்தை நாடவேண்டும் என்றும் கேள்வியெழுப்பினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக