சனி, பிப்ரவரி 11, 2012

வயது சர்ச்சை: தலைமை ராணுவ தளபதியின் மனு தள்ளுபடி- பிறந்த தேதி 1950தான் !

 டெல்லி: தொடக்ககால ஆவணங்கள் அனைத்தும் உங்களின் பிறந்த ஆண்டை 1950 என்று குறிப்பிடுகையில் நீங்கள் ஏன் 1951 என்பதில் பிடிவாதமாக இருக்கிறீர்கள் என்று ராணுவ தளபதி வி.கே.சிங்குக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியதோடு, அவரது மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்திய ராணுவத்தின் தலைமைத் தளபதியான விகே சிங், தான் பிறந்த தேதி 1951, மே 10 என்று கூறி வருகிறார். ஆனால் அரசு ஆவணங்கள் சிலவற்றில் இது 1951 என்றும், 1950 என்றும் மாற்றி மாற்றி உள்ளது.

தான் பிறந்த தேதி மே 10, 1951-தான் என்று கூறி அரசுக்கு எழுதியிருந்தார் விகே சிங். ஆனால் அதனை அரசு ஏற்க மறுத்து, 1950 என்பதையே கணக்கில் எடுத்து, அவரது ஓய்வு தேதியை நிர்ணயித்தது.

உச்சநீதிமன்றத்தில் புகார்

இதனை எதிர்த்த விகே சிங், உச்சநீதிமன்றத்தில் இதுகுறித்து புகார் செய்தார். உடனே அரசுத் தரப்பில் சிங்கின் வாதத்தை நிராகரிக்கும் உத்தரவை திரும்பப் பெற்றுக் கொள்வதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது. இது சிங்குக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்பட்டது.

இதனை டிசம்பர் 30-ந் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சகம் நிராகரிப்பதாக உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனால் ராணுவ தளபதி வி.கே.சிங், உச்சநீதிமன்றத்தை நாடினார். ராணுவ தளபதியின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வயது விவகாரத்தில் தெளிவான நிலையை தெரிவிக்குமாறு கூறியிருந்தது.

இன்று விசாரணை

இந்நிலையில் வி.கே.சிங் மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.

விசாரணையின் போது ஆஜரான அட்டர்னி ஜெனரல் வாகன்வாதி, வி.கே.சிங் விடுத்த கோரிக்கையை நிராகரித்து டிசம்பர் 30-ந் தேதி பிறப்பித்த உத்தரவை திரும்பப் பெறுவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் போது நீதிபதிகள் லோதா, கோகலே ஆகியோர் மத்திய பணியாளர் தேர்வாணையத்தில் (யு.பி.எஸ்.சி) வி.கே.சிங்கின் பிறந்த ஆண்டு 1950 என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டினார். மேலும் தொடக்க கால ஆவணங்களை ஆய்வு செய்து பார்த்ததில், விகே சிங்கின் பிறந்த தேதி 1950-தான் என்பது தெளிவாக உள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

ராணுவத்தில் வெவ்வேறாக தமது பிறந்த தேதி எழுதப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டும் வி.கே.சிங், யு.பி.எஸ்சியில் மாற்றம் செய்யுமாறு ஏன் கோரவில்லை என்றும் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் தேசிய பாதுகாப்பு அகாதெமியில் வி.கே.சிங் இணைந்தபோது 1950ஆம் ஆண்டு என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, "இந்திய ராணுவ அகாடமி, தேசிய பாதுகாப்பு அகாடமியிடம் உள்ள தொடக்ககால ஆவணங்களில் உங்கள் பிறந்த தேதி மே 10, 1950 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நீங்கள் பிடிவாதமாக 1951 என்று கூறுவது ஏன்?" நீதிபதிகள் கேட்டனர்.

மூன்று வழிகள்

மேலும் உங்களுக்கு மூன்று வழிகள் உள்ளன. ஒன்று உங்கள் மனுவை திரும்பப் பெற்றுக் கொள்வது, அரசுடன் பேசி இணக்கமான முடிவுக்கு வருவது அல்லது உச்சநீதிமன்றத்தின் இறுதி முடிவை ஏற்பது. உங்கள் விருப்பத்துக்கே விட்டுவிடுகிறோம்," என நீதிபதிகள் கூறினர்.

மனுவை வாபஸ் பெற்றுக் கொள்வதாக விகே சிங்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

தளபதி மனு தள்ளுபடி

இதனைத் தொடர்ந்து, விகே சிங்கின் பிறந்த தேதி 1950, மே 10தான் என்பது ஆவணங்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விகே சிங்கின் புகார் ஏற்கப்படவில்லை என்பதால் அவரது மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் நீதிபதிகள் இறுதித் தீர்ப்பை அளித்தனர். விகே சிங் வயது தொடர்பாக அரசின் முடிவே இறுதியானது என்றும் நீதிபதிகள் கூறியுள்ளனர்.

இத்தனை பெரிய பதவியிலிருக்கும் ஒருவர் பொது விவாதத்துக்குள்ளானது துரதிருஷ்டவசமானது என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பின்போது குறிப்பிட்டனர். இந்தத் தீர்ப்பு வி கே சிங்குக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக