குவஹாத்தி.july29: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.
ஆனால் என்ன பயன்? “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.
டெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.
நஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.
“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.
கடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.
பி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்ரண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
ஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.
குஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.
மரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.
உறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக