புதன், ஆகஸ்ட் 01, 2012

பயணிகள் ரயிலில் பாதுகாப்பில்லை. அமைச்சர்களின் ஆடம்பர ரயில் பெட்டிக்கு ரூ.1.50 கோடியா? பொதுமக்கள் கொந்தளிப்பு !

தில்லியிலிருந்து சென்னை வந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் 32 மனித உயிர்களை பலி கொண்டதற்கு ரயில்களின் மோசமான பராமரிப்பே காரணம் என குற்றச்சாட்டு வலுத்து வரும் வேளையில், அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் சொகுசு சிறப்பு ரயில் ஆடம்பரத்தின் அடையாளச் சின்னமாக இருப்பது ரயில் பயணிகளிடையே பெரும் கொத்தளிப்பை ஏற்படுத்தி
உள்ளது.

அமைச்சர்கள், ரயில்வே உயர் அதிகாரிகள் பயணம் செய்யும் ஆடம்பரப் பெட்டி Inspection Car என்றழைக்கப்படுகிறது. இதன் விலை ரூ.1 கோடியே 50 லட்சம். இந்தப் பெட்டி சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் சகல வசதிகளையும் கொண்டதாக உள்ளது.

கட்டணம் கொடுத்து பயணிக்கும் சாமானியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருக்கும் நிலையில் அதிகார வர்க்கம் சகல பாதுகாப்போடு சொகுசாக பவனி வருவது ரயில்வே ஊழியர்களிடையேயும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்துக்கு பெட்டிகளின் மோசமான பராமரிப்பே காரணம் என்று புகார் வலுத்து வருகிறது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் படுக்கை வசதிகொண்ட பெட்டிகள், ஏ.சி. வகுப்புப் பெட்டிகளில் குறைந்தபட்சம் தீயணைப்புக் கருவிகள் கூட இல்லாதது, பொது மக்களின் மத்தியில் ரயில் பயணம் குறித்து பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ரயில் பெட்டிகள் பராமரிப்பில் ரயில்வே நிர்வாகம் போதிய கவனம் செலுத்தவில்லை என பரவலாக புகார் கூறப்படுகிறது. இதுபோன்ற விபத்து நடைபெறும்போது அமைச்சர்களும் அதிகாரிகளும் விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்டு செல்வதும் விசாரணைகளுக்கு உத்தரவிடுவதும் வாடிக்கையானதுதான். இந்த வாடிக்கையை அரங்கேற்ற வரும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆடம்பரமாக வந்துபோவதுதான் வேதனையான விஷயம்.

முகுல் ராயின் சொகுசான வருகை: நெல்லூரில் நிகழ்ந்த தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில் தீ விபத்தைப் பார்வையிட்ட மத்திய ரயில்வே அமைச்சர் முகுல் ராய் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தார்.

முகுல் ராய் நெல்லூரில் இருந்து சென்னைக்கு சொகுசு ரயிலில் வந்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் முகுல் ராய்க்கு அளிக்கப்பட்ட வரவேற்பு மிகவும் ஆடம்பரமாக இருந்தது. ரயிலில் இருந்து அவர் இறங்கும் இடத்தில் சிகப்பு நிறத்திலான அழகிய வடிவமைப்பில் கொண்ட தரைவிரிப்பு விரிக்கப்பட்டிருந்தது.

இந்த வரவேற்பு சென்ட்ரலில் இருந்த பயணிகளுக்கு அதிர்ச்சி அளித்தது. நாட்டையே சோகத்தில் ஆழ்த்திய ரயில் தீ விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்துவிட்டுவரும் அமைச்சருக்கு இத்தகைய வரவேற்பு தேவைதானா என்று ஊழியர்கள் கேள்வி எழுப்பினர்.

சுத்தமான 6-வது பிளாட்ஃபாரம்: முகுல் ராய் வருகைக்கு முன்பு சென்னை சென்ட்ரலின் 6-வது பிளாட்ஃபாரமில் மூன்று பாட்டில் நறுமணம் வீசும் திரவம் தெளிக்கப்பட்டது.

இதே பிளாட்ஃபாரத்தில்தான் திங்கள்கிழமை காலை 11.45 மணிக்கு விபத்துக்குள்ளான தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் வந்தடைந்தது.

முகுல் ராய் வருவதற்கு முன்பாக பிளாட்ஃபாரம் முழுவதும் குப்பைகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் முகுல் ராயின் சொகுசு ரயிலுக்குக்கென நேரடியான மின்சார இணைப்பும் கொடுக்கப்பட்டது. மேலும் மின் கோளாறுகள் ஏதேனும் அமைச்சரின் ரயிலில் ஏற்பட்டால் அதனை உடனடியாக சரிசெய்ய இரண்டு எலக்ட்ரீஷியன்களும் நியமிக்கப்பட்டிருந்தனர்.

சொகுசு ரயிலின் சிறப்பம்சம்: இதுபோன்ற சிறப்பு சொகுசு ரயில்களை இந்திய ரயில்வேயில் பல்வேறு மண்டலங்களில் பணியாற்றும் பொது மேலாளர்கள், மத்திய அமைச்சர்கள், ரயில்வே வாரியத் தலைவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும்.

மேலும் இந்த குளிரூட்டப்பட்ட ரயிலின் உள்ளே அனைத்து அடிப்படை வசதிகளும் அழகிய முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த ரயிலில் ஆலோசனைக் கூடம், படுக்கை அறை, சமையலறை ஆகியவையும் அடக்கம். மேலும் இந்த ரயிலில் தீயணைப்புக் கருவிகளும், பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் கருவிகளும் வைக்கப்பட்டிருக்கும்.

இந்த ரயில்கள் அனைத்து தலைமை ரயில்வே அலுவலகங்களில் வைக்கப்பட்டிருக்கும். பொதுவாக இதுபோன்ற ரயில்களில் ஒரு ரயில் பெட்டி மட்டுமே இருக்கும். அமைச்சரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ செல்லும்போது இதில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படும்.

சாதாரண ரயிலில் பாதுகாப்பு?பொது மக்கள் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை. பாதுகாப்பும் கேள்விகுறியாகவே உள்ளது.

குறைந்தபட்சம், ரயில் பெட்டிகளில் தீ விபத்தை தடுப்பதற்கான தீயணைப்புக் கருவிகள் வைக்கலாம். மேலும் பயணிகளின் சுகாதாரத்தைக் கேள்விக்குறியாக்கும் கரப்பான் பூச்சிகளும், எலிகளும், மூட்டைப் பூச்சிகளும் ரயில்களில் காணப்படுகின்றன. இதனைத் தடுக்கும் தொலைநோக்குத் திட்டங்களும் ரயில்வே துறையிடம் இல்லை.

தீயணைப்புக் கருவிகள் அடங்கிய 24 பெட்டிகளுடன் வடிவமைக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு ரூ.40 லட்சம் மட்டுமே செலவாகும். ஆனால் ரயில்வே வாரியம் இந்தத் திட்டத்தை 30 ஆண்டுகளுக்கு முன்பே கைவிட்டுவிட்டது.

தண்டவாளங்களின் பரிதாப நிலை: இந்தியாவில் ரயில்வே தண்டவாளங்களின் நிலை மிகவும் பரிதாபகரமான நிலையில் உள்ளது. எந்தத் தண்டவாளமும் நவீனமயமாக்கப்படவில்லை. தண்டவாளங்களை நவீனப்படுத்துவதற்கான முயற்சிகளை ரயில்வே வாரியம் மேற்கொள்ளவில்லை என்று ஓய்வுபெற்ற தெற்கு ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

உதாரணத்துக்கு 100 ரயில்கள் செல்ல வேண்டிய தண்டவாளத்தில், இப்போது 150 ரயில்கள் செல்கின்றன. இதனால் தண்டவாளத்தின் ஸ்திரத்தன்மை கேள்விக்குறியாகி உள்ளது. உலகளவில் பல நாடுகளில் தண்டவாளங்களின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

புதிய நவீன உத்திகள் புகுத்தப்பட்டு வருகின்றன. தண்டவாளங்களை ஒப்பந்த முறையில் வாங்குவதிலும் முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. ரயிலின் வேகத் தன்மையை தண்டவாளத்தின் உறுதித் தன்மையை ஆராயாமலேயே, ரயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகின்றன.

தண்டவாளத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். இதில் கவனம் சிதறினாலும், பெரியளவிலான உயிரிழப்பு நேரும் வாய்ப்புகள் உள்ளன.

குறைபாடுள்ள பராமரிப்புப் பணிகள்: பராமரிப்புப் பணிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர்கள் குறைந்த அளவில் ஊழியர்களை நியமனம் செய்து பராமரிப்புப் பணிகளை செய்வதே இதுபோன்ற விபத்துகளுக்கு மூல காரணமாக அமைந்து விடுகிறது.

ரயில் பெட்டிகளை சுத்தம் செய்தல், மின்சார சாதனங்களைப் பராமரிப்பது. கழிவறைகளில் தண்ணீர் வசதி போன்றவை சரியாக உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் பெரும்பாலான பயணிகள் பயணிக்கும் ரயில் பெட்டிகள் முறையாக ஆய்வு செய்யப்படுவதில்லை.

அமைச்சர்கள், அதிகாரிகள் செல்லும் சொகுசு சிறப்பு ரயில்களில் மேற்கொள்ளப்படும் கவனம் கோடிக்கணக்கான மக்கள் பயணம் செல்லும் ரயில்களிலும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதே பயணிகளின் எதிர்பார்ப்பாகும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக