எகிப்தில் நடந்த மாபெரும் போராட்டங்களால் அந்த நாட்டின் முன்னாள் அதிபர் ஹொஸ்னி முபாரக் அவர்கள் பதவியில் இருந்து நீக்கப்பட்ட ஓராண்டை அனுட்டிக்கும் வகையில், அங்கு செயற்பாட்டாளர்கள் இன்று ஒரு பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.
அத்துடன் அங்கிருக்கும் ஆளும் இராணுவ கவுன்ஸில் தனது அதிகாரங்களை உடனடியாக சிலிவியன் நிர்வாகத்திடம் கையளிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியிருக்கிறார்கள்.
அன்று ஆரம்பித்த அந்தப் போராட்டங்கள் 16 நாட்களில் முபாரக்கை பதவி விலகச் செய்ததால், அந்த செயற்பாட்டாளர்கள் அடைந்த மகிழ்ச்சி நிறைய நாட்கள் நீடிக்கவில்லை.
முபாரக்கின் பதவி விலகலை அடுத்து நடக்க வேண்டிய ஜனநாயக வழிமுறைகளை நோக்கிய மாற்ற நடவடிக்கைகளை இராணுவ கவுன்ஸில் சரியாகக் கையாளவில்லை என்று செயற்பாட்டாளர்கள் கூறுகிறார்கள். அதனால், அது தமது அதிகாரங்களை உடனடியாக சிலிவியன் நிர்வாகத்திடம் இராணுவம் கையளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
ஆனால், இந்த செயற்பாட்டாளர்களின் பொது வேலைநிறுத்தத்துக்கான அழைப்பு அரசியல் கட்சிகள் மத்தியில் அவ்வளவு வரவேற்பை பெற்றதாக கூறமுடியாது.
இத்தகைய வேலைநிறுத்தம் பொருளாதாரத்தை பாதிக்கும் என்று கூறி தற்போதைய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையைப் பெற்றிருக்கின்ற முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு அதனை எதிர்த்திருக்கிறது.
இராணுவ உயர் குழு கூட இதனை எகிப்தை பலமிழக்கச் செய்யும் ஒரு சதியாக வர்ணித்திருப்பதுடன், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு தாம் பணிய மாட்டோம் என்றும், தாம் ஏற்கனவே திட்டமிட்டபடி அடுத்த வருட நடுப்பகுதியில் அதிபர் தேர்தலை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
அரபு நாடுகளில் கடந்த ஆண்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளையும் மாற்றங்களையும் குறிக்கும் அரபுவசந்தத்தின் போது, பதவி நீக்கப்பட்ட எகிப்தின் அதிபரான ஹொஸ்னி முபாரக் இப்போது படுக்கையில் இருந்தபடி வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுவருகிறார்.
இந்த நிலையில், அரபு வசந்தத்தின் தாக்கத்தினை எதிர்கொண்ட ஏனைய நாடுகளின் தலைவர்களின் நிலை என்ன என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.
துனிஸிய அதிபரான ஷைன் அல் அபிடைன் பென் அலிதான் முதலாவதாக இந்த அரபு வசந்த கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்ட தலைவர்.
தற்போது சவுதி அரேபியாவில் அவர் தஞ்சமடைந்துள்ளார். ஆனால் அவர் இல்லாத நிலைமையிலும் கூட அவருக்கு எதிரான நிதி முறைகேடுகள் குறித்த வழக்கு நடந்து, அவருக்கு தண்டனையும் வழங்கப்பட்டிருக்கிறது.
மிகவும் மோசமான இரத்தக்களரியைச் சந்தித்தவர் லிபிய தலைவர் கேணல் கடாபிதான். கிளர்ச்சிக்காரர்களால் அடித்து, சுட்டு அவர் கொல்லப்பட்டார்.
அந்தப் பிராந்தியத்தில் ஏனைய பல தலைவர்கள் பல்வேறு வகையான நிலைமைகளை இந்தக் காலகட்டத்தில் எதிர்கொண்டார்கள்.
ஏமனின் அதிபரான அலி அப்துல்லாஹ் சாலி கடந்த ஜனவரியில் தனது நாட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பல மாதங்கள் தொடர்ந்த அமைதியீனங்களைத் தொடர்ந்து தனது சகாவிடம் அதிகாரங்களை கையளிப்பதற்கான ஒப்பந்தத்தில் அவர் கைச்சாத்திட்டார். இந்தக் காலகட்டத்தில் அவர் காயமடைந்து மருத்துவச் சிகிச்சையும் பெற்றார்.
சில தலைவர்கள் இந்தக் கிளர்ச்சி அலைகளில் இருந்து ஒருவாறு தப்பித்தும் கொண்டார்கள்.
மொரோக்கோவின் மன்னரான முஹமட், மறுசீரமைப்புகளுக்கு ஒப்புக்கொண்டார். அதன் மூலம் பிரதமரை நியமிப்பதற்கானது உட்பட அவரது பல அதிகாரங்கள் பறிக்கப்பட்டன.
அரசியலமைப்புக்கு உட்பட்ட ஒரு முடியாட்சிக்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தாலும், தனக்கு எதிரான பெரும் போராட்டங்களை அவர் தவிர்த்து விட்டார் என்று அவரை ஆய்வாளர்கள் பாராட்டியுள்ளனர்.
பஹ்ரைனை ஆளுகின்ற அல் ஹலீஃபா குடும்பத்தினர் கூட எதிராளிகளை தடுத்து தமது ஆட்சியை ஓரளவு தக்கவைத்துக்கொண்டனர்.
அவர்களது சுனி இன கூட்டாளிகளான சவுதி அரேபிய அரச குடும்பத்தினர், அரசாங்க நலக் கொடுப்பனவுகளை பயன்படுத்தி தமது இருப்பை பலப்படுத்திக்கொண்டார்கள்.
தற்போது உலக கவனம் எல்லாம் சிரியாவின் மீது குவிந்திருக்கின்ற போதிலும், தான் கேணல் கடாபியின் நிலயை அடைய மாட்டேன் என்பதை சிரியாவின் அதிபர் பஷர் அல் அசாத் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக