காந்திநகர்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக கிளர்ச்சியில் இறங்கிய குஜராத் மூத்த பா.ஜ.க தலைவரான கேசுபாய் பட்டேல் அக்கட்சியை விட்டு விலகிவிட்டார். புதிய கட்சியை துவக்கப் போவதாகவும், அக்கட்சி உண்மையான பா.ஜ.கவாக அமையும் என்றும் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். கேசுபாயுடன் முன்னாள் மத்திய அமைச்சர்
காசிராம் ராணாவும் கட்சியை விட்டு விலகிவிட்டார். 60 வருடங்கள் கட்சிக்கு சேவைபுரிந்த தானும், ராணாவும் மிகவும் மனவேதனையுடன் கட்சியில் இருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்த கேசுபாய், தாங்கள் பா.ஜ.கவை விட்டு விலகவில்லை மாறாக, உண்மையான பா.ஜ.கவை உருவாக்குவதாக கூறினார்.
மேலும் கேசுபாய் கூறியது:
கட்சி தனிப்பட்ட ஒரு நபருக்கானதாக மாறிவிட்டது. அதன் கொள்கைகளில் இருந்து வெகுதூரம் சென்று விட்டது. ஏழைகளும், நடுத்தர வர்க்கத்தினரும் மகிழ்ச்சியாக இல்லை. ஊட்டச்சத்து குறைவினால் பெண்களும், குழந்தைகளும் துன்புறுகின்றார்கள். ஊடகங்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் தவிர்ப்பது உட்பட அனைத்துத் தரப்பினரிடம் இருந்தும் மோடி விலகிச் சென்று விட்டார். இச்சூழலில் மெளனமாக இருக்க முடியாது. ஆகையால் புதிய கட்சியை உருவாக்க தீர்மானித்தோம் என்று கேசுபாய் தெரிவித்தார்.
வருகிற டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கும் வேளையில் குஜராத் மாநில முன்னாள் முதல்வருமான கேசுபாய் பட்டேல் ராஜினாமாச் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கேசுபாய் படேல் தொடங்க உள்ள புதுக்கட்சியால், குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் மும்முனைப் போட்டி உருவாகும் என கருதப்படுகிறது.
பா.ஜ.கவின் முதுகெலும்பாக திகழும் பட்டேல் சமூகத்தின் பெரும் செல்வாக்கு பெற்ற தலைவர்தாம் கேசுபாய் பட்டேல். புதிய கட்சிக் குறித்து இன்று(ஞாயிற்றுக்கிழமை) அறிவிப்பதாக கேசுபாய் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தனது மகா குஜராத் கட்சியை கேசுபாய் பட்டேலின் புதிய கட்சியில் இணைக்கப் போவதாக முன்னாள் குஜராத் அமைச்சர் கோர்தன் ஸடாஃபியா தீர்மானித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக