சனி, ஆகஸ்ட் 11, 2012

3 ஆண்டுகளில் ரூ.49,325 கோடி கறுப்புப் பணம், ரூ.600 கோடி வரிஏய்ப்பு !

India-Black-Moneyபுதுடெல்லி:இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் ரூ.49,325 கோடி அளவுக்குக் கறுப்புப் பணமும், ரூ.600 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பும் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கறுப்புப் பணத்திற்கு எதிராக பாபா ராம்தேவ் உள்ளிட்டோர் மத்திய அரசு மீது குற்றம் சாட்டிவரும் சூழலில் மத்திய நிதி அமைச்சகம் 13 பக்க உண்மை அறிக்கையை நேற்று(வெள்ளிக்கிழமை)
வெளியிட்டது.
அதில் கூறியிருப்பது:
நாட்டுக்கு உள்ளேயும், வெளியேயும் கறுப்புப் பணத்தைக் கண்டறிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கணக்கில் வராத ரூ.30,000 கோடிக்கும் அதிகமான கறுப்புப் பணத்தை மத்திய நேர்முக வரிகள் வாரியம் கண்டறிந்துள்ளது. இது தவிர, கணக்கில் வராத ரூ.2,600 கோடி மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், பல்வேறு வர்த்தக நிறுவனங்களில் வருமான வரித்துறை நடத்திய ஆய்வுகளில் ரூ.17,325 கோடி கறுப்புப் பணம் கண்டறியப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலம் இத்தகவல்கள் கிடைத்துள்ளன.
இந்தியர்கள் பல்வேறு நாடுகளில் பெற்ற தொகைகள் மற்றும் சொத்துகள் தொடர்பாக 12 ஆயிரத்து 500 தகவல்கள் கிடைத்துள்ளன. இவை குறித்து தற்போது புலன்விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், நம் நாட்டில் மேற்கொள்ளப்பட்ட 30 ஆயிரத்து 765 சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனைகள் குறித்த தகவல்களை நிதித்துறையின் உளவுப்புரிவு திரட்டியுள்ளது. இவை குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.
இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தம் மூலம் ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் நாடுகளிடம் இருந்து பல்வேறு தகவல்கள் கிடைத்துள்ளன. அவற்றைப் புலனாய்வு செய்ததில் ரூ.600 கோடி மதிப்புக்கு வரி ஏய்ப்பு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக ரூ.200 கோடி வரி வருமானம் கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டுடன் செய்துகொள்ளப்பட்ட இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு ஒப்பந்தப்படி, அங்கு வங்கிக் கணக்கு வைத்துள்ள இந்தியர்கள் குறித்த தகவல் கிடைத்துள்ளது.
நடப்பாண்டில் மேற்கண்ட ஒப்பந்தப்படி வெளிநாடுகளிடம் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் பல வழக்குகளில் சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன. கறுப்புப் பணப் புழக்கத்தைத் தடுக்க மத்திய நேர்முக வரிகள் வாரியத் தலைவர் தலைமையிலான குழு அறிக்கை தந்துள்ளது. இந்த அறிக்கை பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புககள் மற்றும் மாநில அரசுகளுக்கு மேல் நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் எல்லை கடந்த பரிவர்த்தனைகளில் இருந்து ரூ.48,951 கோடி வரி வருவாயை மத்திய சர்வதேச வரிவிதிப்பு இயக்குநரகம் ஈட்டியுள்ளது என்று நிதி அமைச்சகத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக