செவ்வாய், ஆகஸ்ட் 14, 2012

டிஎன்பிஎஸ்சி குரூப்–2 வினாத்தாள் வெளியான விவகாரம்: 3 பேர் கைது !

டிஎன்பிஎஸ்சிசென்னை:டிஎன்பிஎஸ்சி குரூப்–2 தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தொடர்பாக இதுவரை 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் முத்தூனூரைச் சேர்ந்த சுரேஷ் குமாரிடம் இருந்தும், முன்கூட்டியே விடைத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதுகுறித்த புகாரின் பேரின் கம்பயநல்லூர் காவல்துறையினர் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலையிலும், தருமபுரி தனிப்படை போலீஸார் 2 பேரை கைது செய்துள்ளனர்.  மேலும் பலர் கைது
செய்யப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
நகராட்சி ஆணையர், துணை பதிவாளர், வேலைவாய்ப்பு அதிகாரி  உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்–2 தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்றது. 3 ஆயிரத்து 600 காலி பணியிடங்களுக்கான இந்த தேர்வை, ஆறரை லட்சம் பேர் எழுதினர். இதில், ஈரோட்டைச் சேர்ந்த தனக்கொடி என்ற பெண் முன்கூட்டியே வினாத்தாள் வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடம் நடத்திய விசாரணையில், நாமக்கலை சேர்ந்த ராசப்பனிடம் இருந்து வினாத்தாள் பெற்றதாக தெரிவித்தார். டிஎன்பிஎஸ்சி அலுவலகத்தின் முன்னாள் ஊழியரான ராசப்பனிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோன்று,  ஈரோடு, தருமபுரி, நாமக்கல், கடலூர், மதுரை உள்ளிட்ட நகரங்களிலும் வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியானதாக புகார்கள் எழுந்துள்ளன.
இந்த மோசடி, அரசு வேலை கிடைக்கும் என்ற தங்களின் நம்பிக்கையை சிதைத்து விட்டதாக வேதனையுடன் கூறுகின்றனர் தேர்வு எழுதிய பலர்.
தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திள்ள இந்த சம்பவம் தொடர்பாக, பல்வேறு நகரங்களிலும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த மோசடி தொடர்பாக, திருவண்ணாமலையிலும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விசாரணையின் அறிக்கை விரைவில் டிஎன்பிஎஸ்சி தலைவரிடம் சமர்ப்பிக்கப்படும் என தர்மபுரி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த மோசடியில் தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஎன்பிஎஸ்சி தலைவர் நட்ராஜ் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக