லேசர் துப்பாக்கிகள், ரசாயன, உயிரியல் ஆய்வுக் கருவிகள், பெரும் சக்தி படைத்த டெலஸ்கோப் உள்ளிட்டவையோடு செவ்வாயில் தரையிறங்கிய இந்த விண்கலத்தை கம்ப்யூட்டர் கட்டுப்பாட்டிலான ஆட்டோ பைலட்தான் இயக்கியது.
செவ்வாய் கிரகத்துக்குள் நுழையும்போது இதன் வேகம் 20,921 கி.மீயாக இருந்தது. இது ஒலியின் வேகத்தை விட 17 மடங்கு அதிகம். இந்த பயங்கரமான வேகத்தில் கிரகத்துக்குள் நுழைந்த க்யூரியாட்சிட்டி கிட்டத்தட்ட 7 நிமிடங்களில் தரைப் பகுதியை நெருங்கியது.
இதையடுத்து அதன் பாராசூட்களும் ராக்கெட்களும் செயல்பட்டு அதன் வேகத்தை மட்டுப்படுத்தின. இதைத் தொடர்ந்து விண்கலம் தரையைத் தொடும் முன் அதிலுள்ள ஒரு கிரேன் முதலில் வெளியே எட்டிப் பார்த்தது. பின்னர் அந்த கிரேனிலிருந்து நைலான் கயிறுகள் மூலம் க்யூரியாசிட்டி விண்கலம் தரையில் பத்திரமாக இறங்கியது.
இதையடுத்து கிரேனில் உள்ள ராக்கெட்டுகள் செயல்பட்டு அதை விண்கலத்தில் இருந்து சில கி.மீ. தூரத்தில் தூக்கி எறிந்தன.
இதையெல்லாமே விண்கலத்தின் கம்ப்யூட்டர்களில் உள்ள புரோகிராம்கள் செயல்படுத்தின. கிரகத்துக்குள் நுழைந்த 7 நிமிடங்களில் இது எல்லாம் நடந்து முடிந்து க்யூரியாசிட்டி தரையில் பத்திரமாக தரையிறங்கியுள்ளது.
விண்கலத்தின் வெளிப்புற பாதுகாப்பு கவசத்தைத் திறப்பது. பாராசூட்டை திறப்பது, கிரேனை செயல்பட வைப்பது ஆகிய பணிகளை 79 சிறிய வெடிகள்(pyrotechnic detonations) செய்தன. க்யூரியாசிட்டி பத்திரமாக தரையிறங்கியுள்ளதை, அதை செவ்வாய் கிரகத்தை ஏற்கனவே சுற்றி வரும் நாஸாவின் மார்ஸ் ஒடிஸி செயற்கைக் கோளுக்குத் தெரிவித்தது. பின்னர் அங்கிருந்து பூமிக்கு அடுத்த சில வினாடிகளில் தகவல் வந்து சேர்ந்தது.
இந்த அரிய சாதனையை நாசாவில் கூடியிருந்த 1,400க்கும் மேற்பட்ட விஞ்ஞானிகள் உற்சாகமாக் கொண்டாடினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக