சனி, ஆகஸ்ட் 11, 2012

அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்கு அடியில் கண்ணாடி மாளிகை: காளஹஸ்தியில் பரபரப்பு !

அஸ்திவாரம் தோண்டிய போது பூமிக்கு அடியில் கண்ணாடி மாளிகை: காளஹஸ்தியில் பரபரப்புவீடு கட்ட அஸ்திவாரம் தோண்டிய போது, பூமிக்கு அடியில் கண்ணாடி மாளிகையும் சுரங்கப் பாதையும் இருப்பது தெரிய வந்தது. தகவல் அறிந்து ஏராளமான மக்கள் அந்த இடத்தில் திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாளஹஸ்தி மண்டலம் அம்மபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குருவய்யா (40), விவசாயி. நகரி தெருவில் உள்ள இவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்ட திட்டமிட்டுள்ளார். அஸ்திவாரத்துக்காக பள்ளம் தோண்டும் பணியில் தொழிலாளிகள் ஈடுபட்டுள்ளனர். கடந்த 7ம் தேதி பள்ளம் தோண்டும் போது, பூமிக்கு அடியில்
கட்டிடம் தென்பட்டதை பார்த்து தொழிலாளிகள் அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைந்தனர். மேலும் ஆழமாக தோண்டிய போது கட்டிடத்துக்கு செல்லும் படிக்கட்டுகள் தெரிந்தன. பள்ளம் தோண்ட தோண்ட படிக்கட்டுகள் கீழிறங்கி சென்றன. பின்னர் பூமிக்கடியில் இருக்கும் கட்டிடத்துக்கு போகும் அளவுக்கு வழி தெரிந்தது. அப்போது அந்த வழி ஒரு சுரங்கப் பாதைக்கு சென்றது. இந்த தகவல் சுற்று வட்டார பகுதிகளில் பரவியதும் ஏராளமான பொதுமக்கள் அங்கு திரண்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்து நேற்று தகவல் அறிந்த சிவன் கோயில் நிர்வாக அதிகாரி கஸ்தூரி (பொறுப்பு), செயற்பொறியாளர் ராமிரெட்டி, ஆணையர் அஜய் கிஷோர், தாசில்தார் வீராசாமி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் பொதுமக்கள் செல்ல தடை விதித்தனர். பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

கடந்த 1885ம் ஆண்டு ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் ஆட்சி செய்த மன்னர் தாமர்லாவுக்கு சொந்தமான கண்ணாடி மாளிகை சம்பந்தப்பட்ட பகுதியில் இருந்ததாகவும், அதில்தான் மன்னரின் குடும்பத்தினர் தங்கி இருந்ததாகவும் கூறுகின்றனர். மேலும் தாமர்லாவின் ஆட்சிக்கு பின்பு அவரது வம்சாவளியை சேர்ந்த மஹிபால் நாயனி என்பவர் அந்த கண்ணாடி மாளிகையில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 1930ம் ஆண்டு மஹிபால் நாயனி, ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை ஆள பட்டாபிஷேகம் செய்யப்பட்டுள்ளார். வரலாற்று சான்றுகள்படி ஸ்ரீகாளஹஸ்தி பகுதியை ஆண்ட கடைசி மன்னன் மஹிபால் நாயனி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மன்னர் மஹிபால் நாயனிக்கு பின்பு அவரது வம்சாவளியை சேர்ந்தவர்கள் அங்கு வசித்துள்ளனர். இந்திய சுதந்திரத்துக்கு பின்னர் மன்னரின் வம்சத்தார் தனி நபருக்கு அந்த இடத்தை விற்றுவிட்டு வேறு இடங்களுக்கு சென்றுவிட்டனர். பின்னர் பராமரிக்காமல் விடப்பட்ட மாளிகை, மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது. ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள கண்ணாடி மாளிகை, சுரங்கப் பாதை குறித்து தொல்லியல் துறையினரின் ஆய்வுக்கு பிறகே உண்மை நிலவரம் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக