அங்காரா:சிரியா சர்வாதிகார அதிபர் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் இருந்து அகற்ற எதிர்ப்பாளர்கள் நடத்தும் போராட்டம் ஒன்றரை ஆண்டுகளை தாண்டியுள்ள சூழலில் அந்நாட்டு விவகாரம் தொடர்பாக ஈரான்-துருக்கி இடையே கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளன. எதிர்ப்பாளர்களை கொடூர்மாக கொன்றொழிக்கும் பஸ்ஸார் அல் ஆஸாதை பதவியில் நிலை நிறுத்த
ஈரான் ஆர்வமாக இருக்கும் வேளையில், எதிர்ப்பாளர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகிறது துருக்கி.
பஸ்ஸாரை பதவியில் இருந்து அகற்ற அமெரிக்காவுடன் துருக்கி மற்றும் இதர நாடுகள் கைக்கோர்ப்பது மேற்காசியாவில் கடுமையான மோசமான விளைவுகள் உருவாக காரணமாகும் என்று ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரியாவை சின்னாப் பின்னமாக்கினால், அடுத்து போர் வெறியர்கள் துருக்கியை குறிவைப்பார்கள் என்று ஈரான் ஜெனரல் ஹஸன் ஃபிரோஸாபாதியின் எச்சரிக்கைக்கு துருக்கி பிரதமர் எர்துகான் கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார்.
சொந்த குடிமக்களை கொடூரமாக கொன்றொழிக்கும் சிரியா அரசு, இஸ்லாத்தின் விழுமியங்களையும், மனிதநேயத்தையும் காற்றில் பறத்திவிட்டது என்றும், அத்தகைய அரசுகளை ஆதரிப்பது விழுமியங்களுக்கு ஒவ்வாதது என்றும் எர்துகான் ஈரானுக்கு பதில் அளித்துள்ளார்.
எர்துகான் பிரதமராக பதவியேற்ற பிறகு ஈரான்-துருக்கி இடையேயான உறவு வலுவடைந்தது. எர்துகானின் ராஜதந்திர நடவடிக்கைகள் உலகின் கவனத்தை ஈர்த்தன. மேற்கத்திய நாடுகளின் விமர்சனங்களுக்கு அஞ்சாமல் ஈரானின் அணுசக்தி உரிமைக்காக வாதிட்ட எர்துகான் டெஹ்ரானுக்கு சென்று தனது ஆதரவை உறுதிச்செய்திருந்தார். ஈரானுக்கு எதிராக அமெரிக்கா ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தாக்கல் செய்த தீர்மானத்தை எதிர்க்கவும் துருக்கி தயாரானது.
உற்ற தோழர்களாக மாறிய இரு நாடுகளும் தற்பொழுது பகைமை உணர்வுகளை வளர்த்துக்கொண்டு எதிரி நாடுகளாக மாறிவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. ஷியா கொள்கையையும், பாரசீக தேசிய வாதத்தையும் இணைத்து பிரிவினையை உருவாக்குவதுதான் ஈரானின் அணுகுமுறை என துருக்கி கருதுகிறது.
துருக்கியின் ராஜதந்திர நடவடிக்கைகளுக்கு தடை போடுதல், துருக்கிக்கு எதிராக குர்த் கிளர்ச்சியாளர்களுக்கு உதவுதல், சிரியா விவகாரத்தில் பாரபட்சமாக நடந்துகொள்வதற்கு பதிலாக ஷியா ஆதரவு கொள்கையை கையாளுதல் ஆகியவற்றை ஈரான் கடைப்பிடிப்பதாக துருக்கி அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
சிரியா அரசு வீழ்ச்சியடைந்தால் ஈரானின் வெளிப்புற பாதுகாப்பு கவசம் தகர்ந்துவிடும் என்று அந்நாடு அஞ்சுவதாக துருக்கியில் போர் தந்திர ஆய்வு விவகார மையத்தின் பேராசிரியர் பைருல் அகுன் கூறுகிறார். ஒரு வேளை அந்நிய நாடுகளின் ஆதரவில் ஒரு ‘பாரசீக வசந்தம்’ அரங்கேறிவிடுமோ என ஈரான் அஞ்சுவதாகவும் பைருல் அகுன் கருத்து தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக