கொழும்பு:இலங்கையில் கடந்த ஆண்டு பல மத வழிபாட்டுத் தலங்களும், சிறுபான்மை சமூகத்தினரும் தாக்குதலை சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவாலயங்கள் மற்றும் கிறித்துவ சமூகத்தின் மீது கடந்த ஆண்டு பல தாக்குதல்கள் இடம் பெற்றுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது. அதே போல பள்ளிவாசல்களும்
தாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2011-ஆம் ஆண்டிற்கான சர்வதேச மதச் சுதந்திரம் குறித்த அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கையில் சுமார் 70 சதவீதம் அளவுக்கு பெரும்பான்மையினராக இருக்கும் சிங்கள மக்களாலேயே இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க அரசின் அந்த ஆண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இருந்தபோதும் அப்படியான தாக்குதல்கள் நாட்கள் செல்லச் செல்ல குறைந்து வந்துள்ளன என்றும் அந்த அறிக்கை கூறுகிறது.
உலக அளவில், பல நாடுகளை உள்ளடக்கி வெளியாகியுள்ள இந்த அறிக்கையில், கடந்த ஆண்டு இலங்கை அரசு தமது அரசியல் சாசனத்தின் அடிப்படையில் பொதுவாக மத சுதந்திரத்தை மதித்தே வந்துள்ளது என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆனாலும் 2011 ஆம் ஆண்டு, கிறித்துவர்கள் மீது நடைபெற்ற பல தாக்குதல்கள் உள்ளூரில் இருக்கின்ற ஊடகங்களில் வெளிவராமலேயே போனது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அதிலும் குறிப்பாக மிகச் சிறிய சிறுபான்மையாக இருக்கும் இவாஞ்சலிக்கல் கிறித்துவரகள், குறிப்பிடத்தகுந்த பிரச்சினைகளை எதிர்கொண்டார்கள் என்று அந்த அறிக்கை கூறுகிறது.
புத்த பிக்குகளால் வழிநடத்தப்பட்ட பல குழுக்குகள், கிறித்துவ மத போதகர்கள் மற்றும், கூட்டத்தினர் மீது நடத்திய தாக்குதல்களோ, அல்லது அச்சுறுத்தல் சம்பவங்களோ குறைந்தது ஐந்து நடைபெற்றுள்ளதாகவும் அமெரிக்க அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட சம்பவத்தில் தேவாலயம் ஒன்றின் மீது எறிகுண்டு வீசப்பட்டது என்றும், எனினும் அதில் யாரும் காயமடையவில்லை எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.
பல சமயங்களில் கிறித்துவர்கள் தார்மீகமற்ற வழிகளில் மதமாற்றம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள் என்று, பௌத்தர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
இலங்கையில் கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருக்கும் கார்டினல் மால்கம் ரஞ்சித் கூட, அமெரிக்க அடிப்படைவாதிகள் என்று அவரால் கூறப்படுபவர்கள், சலுகைகளை அளித்து கத்தோலிக்கர்களையும் பௌத்தர்களையும் மதமாற்றம் செய்வதாகக் கூறியுள்ளார் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் கிறித்தவர்கள் இதை மறுக்கிறார்கள். அண்மையில் கூட அங்கு பள்ளிவாசல்களின் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளன என்பதும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் ஒரு பள்ளிவாசல் அழிக்கப்பட்டுள்ளது என்றும் பல பள்ளிவாசல்கள் மீது கற்கள் அல்லது எறிகுண்டுகள் வீசப்பட்டுள்ளன என்றும் அமெரிக்க அறிக்கை கூறுகிறது. இச்சம்பவத்தில் புத்த பிக்குகளின் செயற்பாட்டை அரசு கூட கண்டித்தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக