திங்கள், ஆகஸ்ட் 13, 2012

பொதுக்கூட்டத்தில் கேள்வி கேட்டவரை கைது செய்தது சர்வாதிகாரமானது. மம்தாவுக்கு பலத்த எதிர்ப்பு !

 மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி சர்வாதிகாரி போல செயல்படுவதாக பத்திரிகையாளர் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு குற்றம்சாட்டி உள்ளார். கடந்த 8-ம் தேதி பெல்பஹரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மம்தாவிடம், விவசாயிகள் செத்துக் கொண்டிருக்கின்றனர், அவர்களைக் காப்பாற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள் என்று சிலாதித்ய செüத்ரி கேட்டதுடன், வெற்று வாக்குறுதி அளித்தால் போதாது என்று கூறியுள்ளார்.
 இதனால் கோபமடைந்த மம்தா, செüத்ரியை மாவோயிஸ்ட் என்று கூறியதுடன், அவரைக் கைது செய்யுமாறு காவல் துறையினருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, செüத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். மம்தாவின் இந்த செயலுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. இதுகுறித்து, பத்திரிகையாளர் கவுன்சில் தலைவர் மார்கண்டேய கட்ஜு கூறியதாவது:

 பொதுக்கூட்டத்தில் தன்னை எதிர்த்து கேள்வி கேட்டவரை மம்தா கைது செய்ய உத்தரவிட்டது அதிர்ச்சி அளிக்கிறது. இவரது செயல் சர்வாதிகாரமானது, சகிப்புத் தன்மையற்றது, விசித்திரமானது. அரசு எந்திரத்தைத் தவறாக பயன்படுத்தியதுடன் சட்டத்தையும், மனித உரிமையையும் மீறி உள்ளார்.

 மம்தாவின் சில செயல்பாடுகளை நான் ஏற்கெனவே பாராட்டி உள்ளேன். ஆனால் இப்போது எனது கருத்தை மாற்றிக் கொள்கிறேன். ஜனநாயகத்துக்கு எதிராக நடந்து கொண்டதன் மூலம், அரசியல் கட்சித் தலைவராக இருப்பதற்கான தகுதியை மம்தா இழந்து விட்டார் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக