செவ்வாய், ஆகஸ்ட் 07, 2012

அத்வானி தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டார்: காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி !

புதுடெல்லி:2014-ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பே பா.ஜ.க தலைவர் எல்.கே.அத்வானி தோல்வியை சம்மதித்துவிட்டார் என காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதிக் கட்சிகள் கூறியுள்ளன.சொந்த கட்சியின் திறமையில் சந்தேகம் அடைந்துள்ள அத்வானி, போராட்டத்தை கைவிட விரும்புகிறார் என அத்வானி தனது வலைப்பூவில்(ப்ளாகில்) எழுதியுள்ள குறிப்புக்கு பதில் அளிக்கவே காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராஜீவ்
சுக்லா தெரிவித்தார்.
2014-ஆம் ஆண்டு பா.ஜ.க-காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமராக வாய்ப்புள்ளதாக அத்வானி தனது வலைப்பூவில் எழுதியிருந்தார்.
இதுத்தொடர்பாக அவர் தனது வலைப்பூவில் எழுதியிருப்பது: அடுத்த தேர்தலில் “பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர், இவ்விரு கட்சிகளில் ஒன்றின் ஆதரவுடன் பிரதமராக சாத்தியமுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்று நடந்துள்ளது. எனினும் பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத ஒருவர் பிரதமராக வந்தாலும் அவர் எத்தனை நாள் அப்பதவியில் தாக்குப்பிடிப்பார் என்பதை கணித்துச் சொல்லமுடியாது.
சரண் சிங், சந்திரசேகர், தேவெ கவுடா, ஐ.கே.குஜ்ரால் போன்றோர் காங்கிரஸ் ஆதரவுடன் இதற்கு முன்பு பிரதமராக இருந்துள்ளனர். பாஜக ஆதரவுடன் வி.பி.சிங் பிரதமராக இருந்துள்ளார். ஆனால், அவர்களால் நிலையான ஆட்சியைத் தரமுடியவில்லை.
மத்தியில் காங்கிரஸ் அல்லது பாஜக கட்சியைச் சேர்ந்தவர் பிரதமராக இருந்தால்தான் நிலையான ஆட்சி அமையும். கடந்த 25 ஆண்டு கால தேசிய அரசியல் நிகழ்வுகளால், காங்கிரஸ், பாஜக ஆதரவு இல்லாமல் மத்தியில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அந்த அடிப்படையில் 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மூன்றாவது அணியால் ஆட்சியைப் பிடிக்க முடியாது.
சமீபத்தில் 2 மத்திய அமைச்சர்களுடன் உரையாடியபோது அடுத்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக கூட்டணிகளால் பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையில் மூன்றாவது அணிதான் ஆட்சியமைக்கும் என்று தோன்றுகிறது என்று கருத்துத் தெரிவித்தனர். ஆனால், அவர்களின் கருத்தில் எனக்கு உடன்பாடில்லை’ இவ்வாறு அத்வானி குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செயலாளரும், பாராளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணையமைச்சருமான ராஜீவ் சுக்லா கூறியது: பாஜக அல்லாதவர் பிரதமராக வாய்ப்புள்ளது என்று அத்வானி தெரிவித்துள்ளதன் மூலம், தேர்தல் எனும் ஓட்டப்பந்தயம் தொடங்குவதற்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் அத்வானி என்று சுக்லா கூறினார்.
சமாஜ்வாதி கட்சியின் பொதுச் செயலாளர் மோகன் சிங் கூறியது: ”தயக்கத்துடன் போர்க்களத்தைச் சந்திக்கும் தளபதியால் எவ்வாறு போரில் வெற்றிபெற முடியும்? தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டால், அத்வானியை எந்த வகையான தளபதி எனக் கருதுவது” என்றார்.
“பா.ஜ.கவுக்குள் நிலவும் உட்கட்சிப் பூசலே அத்வானியின் இக்கருத்துக்குக் காரணம்” என்று காங்கிரஸ் கட்சியின் எம்.பியான சத்யவிரத சதுர்வேதி கருத்து தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக