சென்னை: நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்ஜிபி நிறுவிய சென்னை கே.கே.நகர் பத்மா ஷேசாத்திரி பாலபவன் சீனியர் பள்ளியில் படித்து வந்த மாணவன் ஒருவன் பள்ளிக்கூட நீச்சல் குளத்தில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து பள்ளியை பெற்றோர்கள் முற்றுகையிட்டுள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.பத்மா சேஷாத்திரி பள்ளியில் படித்து வந்த மாணவன் ரஞ்சன். 4வது வகுப்பு படித்து வந்தான். இவனது தந்தை மனோகரன் ஒரு திரைப்பட
இயக்குநர். மாசிலாமணி உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். நடித்தும் வருகிறார்.
இன்று காலை பள்ளி வளாகத்தில் உள்ள நீச்சல் குளத்தில் மாணவன் ரஞ்சன் உள்ளிட்ட சில மாணவர்கள் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். பயிற்சி முடிந்து மாணவர்கள் குளத்தை விட்டு வெளியேறியபோது ரஞ்சனை மட்டும் காணவில்லை. இதையடுத்து நீச்சல் குளத்தில் பயிற்சியாளர் இறங்கி தேடியபோது ரஞ்சன் உள்ளே மூழ்கிக் கிடந்தது தெரிய வந்தது.
இதையடுத்து அவனை தூக்கிக் கொண்டு அருகில்இருந்த மருத்துவமனைக்குச் சென்றனர்.அங்கு ரஞ்சன் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தகவல் பரவியதும் ரஞ்சனின் பெற்றோர் மற்றும் பிற மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்குப் படையெடுத்து வந்தனர். நூற்றுக்கணக்கானோர் பள்ளியில் குவிந்து விட்டனர். ஆனால் அவர்களை பள்ளிக்குள் அனுப்ப பள்ளிக்கூட வாட்ச்மேன் மறுத்து விட்டார். இதனால் கடும் வாக்குவாதம் மூண்டது.
பள்ளிக்கூடத்திற்கு தற்போது போலீஸார் விரைந்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் தாயார் திருமதி ஒய்ஜிபியால் நிறுவப்பட்டது இப்பள்ளி. சமச்சீர் கல்வி குறித்து ஆராய முதல்வர் ஜெயலலிதாவால் அமைக்கப்பட்ட குழுவில் திருமதி ஒய்ஜிபியும் ஒரு உறுப்பினராக இடம் பெற்றிருந்தார் என்பது நினைவிருக்கலாம். ஏற்கனவே சென்னை ஜியோன் பள்ளி பேருந்தில் பயணித்த மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டையில் விழுந்து உயிரிழந்தாள். இதையடுத்து பள்ளித் தாளாளர் விஜயன் கைது செய்யப்பட்டார். அதேபோல இப்போது திருமதி ஒய்ஜிபி மீது நடவடிக்கை வருமா என்று தெரியவில்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக