காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் மர பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில், 70 பேர் காயமடைந்தனர். இதில் 4 போலீஸ்காரர்களும் அடக்கம். இதிலுள்ள சோகமாக தமாஷ் என்னவென்றால், அப்பகுதி மக்கள் தமக்கு வசதிகள் செய்துதர வேண்டும் என்று நடத்திய போராட்டத்தையடுத்து, அவர்களிடம் குறை கேட்க சென்ற உயரதிகாரிகள் பாலத்தில் நடந்து சென்றபோதே, பாலம் இடிந்து வீழ்ந்தது.பொதுமக்களுடன் உயரதிகாரிகளும், அவர்களுடன் சென்ற பாதுகாவலர்களும் தண்ணீரில் வீழ்ந்தனர்.
அதன்பின் நடந்தவைதான் தமாஷ்.
அப் பகுதி மக்களை காப்பாற்றுவதற்காக வாக்குறுதி கொடுக்கச் சென்ற அதிகாரிகளை தண்ணீரில் இருந்து மக்கள்தான் காப்பாற்றி அனுப்பி வைக்க வேண்டியதாக போய்விட்டது.
ஸ்ரீநகரின் வடபகுதியில் உள்ள மீர் பிஹ்ரியில் வசிக்கும் மக்கள், தமது பகுதியில் வீதிகள் சரியான முறையில் பராமரிக்கப் படுவதில்லை என்று போராட்டத்தில் இறங்கியிருந்தனர். இவர்கள் வீதி மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து தடைப்பட்டது. விஷயம் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட, பொதுமக்களிடம் குறை கேட்க புறப்பட்டது அதிகாரிகள் டீம்.
அவர்கள் புறப்பட்டபோது பூனை குறுக்கே ஓடியதா என்று தெரியவில்லை (காஷ்மீரில் பூனை உள்ளதா?) ஆனால், நடந்தவை நன்றாக இல்லை.
நிதித்துறை அசிஸ்டென்ட் கமிஷனர் இனாமுல் ஹக் தலைமையில் அதிகாரிகள் குழு கிளம்பியது. அவர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதற்காக, நிகீன் போலீஸ் நிலைய எஸ்.ஹெச்.ஓ. (SHO – Station House Officer) மிர் இம்தியாஸ் தலைமையில் காவலர்களும் அணிவகுத்தனர். இவர்கள் அனைவரும், ஸ்ரீநகரின் டால் லேக் கரையில் போய் இறங்கினர்.
ஏரிக்கரை ஓரமாக மக்களின் ஒரு பகுதியினர் இவர்களது வருகைக்காக காத்திருந்தனர். இவர்கள் வந்தவுடன், போராட்டம் நடக்கும் இடத்தை காட்டுவதற்காக அவர்கள் நின்றிருந்தனர்.
பொதுமக்கள் போராடும் பகுதி லேக்குக்கு அந்தப் பக்கம் இருந்தது. லேக்கை கடப்பதற்கு இருந்த பாலம்தான், ஜூந்தா பாலம் என அறியப்பட்ட மரப் பாலம்.
லேக்கின் இந்தப் பக்கம் அதிகாரிகளை கண்ட பொதுமக்களும், அதிகாரிகளுடன் இணைந்து பாலத்தில் ஏறினர். அனைவரும் பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, பாலத்தின் ஒரு பகுதி அப்படியே உடைந்து லேக்கில் வீழ்ந்தது.
நிதித்துறை அதிகாரிகள், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுக்க சென்ற காவல்துறையினர் அனைவரும் பொத் பொத்தென்று தண்ணீரில் வீழ்ந்தனர்.
போராட்டத்தை நிறுத்திவிடடடு, ஓடிவந்து அதிகாரிகளை லேக்கில் இருந்து வெளியே இழுத்துப் போட்டனர்.
பாதுகாப்புக்காக வந்த போலீஸாரின் பிஸ்டல்கள், ஆட்டோமேடிக் எந்திர துப்பாக்கிகள் அனைத்தும் தண்ணீருக்குள் வீழ்ந்ததால், இயக்கப்பட முடியாத அளவில் ரிப்பேராகி விட்டன.
இதற்கிடையே அப்பகுதி மக்கள் அனைவரும் ஏரிக் கரையோரமாக கூடி விட்டனர். தமது பகுதியில் உள்ள போக்குவரத்து வசதிகள் சரியில்லை என்று, நீங்களே பார்த்து விட்டீர்களே என ஆளாளுக்கு சத்தம் போட துவங்கினர்.
அதிகாரிகளுடன் பாலத்தில் நடந்து சென்ற பெண்மணி ஒருவர் ஏரியில் வீழ்ந்ததில் மயக்கமடையவே, அவரது மயக்கத்தை தெளிய வைத்து, அழைத்துச் சென்றனர்.
ஏற்கனவே வீதி சரியில்லை என்று போராடிக் கொண்டிருந்த மக்களிடம் குறை கேட்கச் சென்ற அதிகாரிகள், அந்த மக்களுக்கு இருந்த ஒரேயொரு பாலத்தையும் உடைத்து விட்டதில் வெகுண்டெழுந்த மக்கள், வீதிப் போராட்டத்துடன் சேர்த்து, பாலத்துக்காகவும் போரடத் துவங்கி, வீதி மறியலில் ஈடுபட்டனர்.
வீதியில் மறியல் செய்யக்கூடாது என போலீஸார் தடுத்ததில், மக்களுக்கும் போலீஸூக்கும் இடையே முறுகல் நிலை ஏற்பட்டது. தண்ணீரில் வீழ்ந்ததால், போலீஸின் கைகளில் இருந்த துப்பாக்கிகள் வெடிக்காது என்பது பொதுமக்களுக்கு நன்றாக தெரிந்திருந்தது.
இதனால், போலீஸை கற்களால் தாக்க துவங்கினர்.
பாவம் போலீஸ், ஏற்கனவே லேக் தண்ணீரில் வீழ்ந்து ஈரம் சொட்ட நின்றிருந்தனர். இதில் கல்லெறியும் விழவே, வெடிக்காத துப்பாக்கிகளையும் எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர்.
இந்த மரப் பாலம் 1970-களில் ஜனதா அரசினால் போட்டுக் கொடுக்கப்பட்டது. பல வருடங்கள் ஆன நிலையில், பாலம் தள்ளாடும் நிலையில்தான் இருந்தது. அதிகாரிகளுக்கு பல தடவைகள் மனு கொடுத்தும், யாரும் கண்டுகொள்ளவில்லை. இப்போது, அதே பாலத்தில் அதிகாரிகளும் ஏறி, தண்ணீரில் வீழ்ந்துள்ளனர்.
தமது பகுதியில் உள்ள வீதிகளை உடனடியாக திருத்தாவிட்டாலும், இந்த பாலத்துக்கு ஒரு வழி சொல்லாமல் அந்த இடத்தை விட்டு அதிகாரிகள் அகல முடியாது என்று சொல்லி விட்டனர் பொதுமக்கள்.
இறுதியில், இன்னமும் ஒரு வார காலத்துக்குள் பாலத்தை புதிதாக அமைத்துக் கொடுப்பதாக அதிகாரிகள் வாக்குறுதி கொடுத்த பின்னரே, அவர்களை அங்கிருந்து செல்ல அனுமதித்தனர் பொதுமக்கள். பாதுகாப்புக்கு வந்தவர்கள் ஏற்கனவே ஓடி விட்டதால், ஆள், படை, சேனை, அம்பு ஏதுமின்றி, திரும்பிச் சென்றனர் அதிகாரிகள்!
எமக்கு ஒரு சந்தேகம்.
பாலம் தள்ளாடும் நிலையில் இருந்தது உண்மை. ஆனால், அதிகாரிகள் அதில் ஏறி நடந்தபோது, கரெக்டாக எப்படி வீழ்ந்தது? இயல்பாகவே நடந்ததா, அல்லது, பொதுமக்களே வெட்டிவிட்டு, அதிகாரிகளை ஜலக்கிரீடை செய்ய வைத்தார்களா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக