
அவருடைய வீட்டினுள்ளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அயல்வாசிகள் புகார் கூறியதைத் தொடர்ந்து காவல் துறையினர் வீட்டினுள் சென்று பார்த்தபோது படுக்கையறையில் ஃபிஸா முஹம்மதின் உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது.
ஃபிஸா முஹம்மது, 2008 நவம்பரில் ஹரியானாவின் துணை முதல்வராக பதவி வகித்து வந்த சந்தர் மோகனைத் திருமணம் செய்துகொண்டார். அப்போது சந்தர் மோகனுக்கு ஏற்கெனவே திருமணமாகியிருந்தது. ஃபிஸாவும் ஏற்கெனவே மணமாகி விவாகரத்து பெற்றவர். இரண்டாவது திருமணத்துக்காக இருவரும் முஸ்லிமாக மாறினர். சந்தர்மோகன், சந்த் முஹம்மதாகவும் அனுராதா பாலி, ஃபிஸா முஹம்மதாகவும் பெயர்களை மாற்றிக்கொண்டனர். இவர்களுடைய திருமணம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.
திருமணம் ஆவதை முன்னிட்டு தனது துணை அட்வகேட் ஜெனரல் பதவியைத் துறந்தார் ஃபிஸா. சந்தர் மோகன் இரண்டாம் மணம் புரிந்ததும் அவர் தனது மகனே அல்ல என்று அவரது தந்தையான முன்னாள் முதல்வர் பஜன் லால் அறிவித்தார்.
தலைமறைவான பின்னர் இவர்கள் திருமணம் நடைபெற்றது. பல நாட்கள் சந்தர் மோகன் அரசு அலுவல்களை கவனிக்கவில்லை என்பதால் இவர் துணை முதல்வர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.
ஆனால் இவர்கள் இருவரும் சுமார் 40 நாள்கள் மட்டுமே சேர்ந்து இருந்தனர்.
சந்தர்மோகன் ஒரு நாள் திடீரென வீட்டைவிட்டு வெளியேறிய அவர், தனது முதல் மனைவி, குழந்தைகளுடன் வாழ விரும்புவதாக தெரிவித்தார். பின்னர், 2009-ம் ஆண்டு ஜூலை மாதம், மூத்த மதத் தலைவர்கள் முன்னிலையில் அவர் மீண்டும் ஹிந்து சமயத்தை ஏற்றுக் கொண்டார்.
அதற்கு முன்பாக, மார்ச் மாதம் தொலைபேசியில் ஃபிஸாவை அழைத்து ‘தலாக்’ சொல்லி திருமணத்தை முறித்துக் கொண்டார். மேலும் அது குறித்து செல்போனில் எஸ்.எம்.எஸ்.அனுப்பினார்.
அவர்களின் பிரிவுக்குப் பின்னர், சந்தர் மோகன் மீது பாலியல் பலாத்காரம், மோசடி, மத உணர்வுகளை புண்படுத்தியது ஆகிய குற்றச்சாட்டுகளை சுமத்தி ஃபிஸா வழக்கு தொடர்ந்தார். அரசியலிலும் நாட்டம் செலுத்திய அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் இணைவார் என்று கூறப்பட்டது. 2009 ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் சந்தர் மோகன் குடும்பத்தினருக்கு எதிராக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.
தற்பொழுது ஃபிஸாவின் மரணத்தில் பலத்த சந்தேகம் எழுந்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக