வியாழன், ஆகஸ்ட் 16, 2012

பசிபிக் தீவில் ஆச்சரியம்.. 700 ஆண்டு பழசு, எரிமலை கல்லில் பிரமாண்ட சிற்பங்கள் !

பசிபிக் பெருங்கடலில் உள்ள ஈஸ்டர் தீவில் எரிமலைக் கற்களை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட பழங்கால சிலைகள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகின்றன. தென்அமெரிக்க நாடு சிலி. இங்கிருந்து சுமார் 3700 கி.மீ. தொலைவில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ளது ‘ஈஸ்டர் தீவு’.117 சதுர கி.மீ. பரப்பு கொண்ட சின்ன தீவு. பூமியில் உள்ள புதிரான பகுதிகளில் இதுவும் ஒன்று. ஒரே கல்லில் செதுக்கப்பட்ட உயரமான சிலைகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை இங்கு காண முடிகிறது. அதிசய சிலைகளின் அணிவகுப்பு பார்ப்பவர்களை பிரமிக்க
வைப்பதாக உள்ளது. இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இவை வைக்கப்பட்டிருக்கலாம் என்று சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன.
ஆனாலும், இதுதொடர்பான உறுதியான ஆதாரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. முதன்முதலில் இங்கு வாழ்ந்த பழங்குடியினர் தென்அமெரிக்காவில் இருந்து வாழ்வாதாரத்துக்காக இப்பகுதிக்கு குடிபெயர்ந்திருக்கலாம். இவர்கள் பாலிநேஷியன்கள் என்ற பழங்குடியினர். ஈஸ்டர் தீவின் முந்தைய பெயர் ரபா நுய். அங்கு வசித்த பழங்குடியினரும் அதே பெயரில் அழைக்கப்பட்டுள்ளனர்.
மிக பிரமாண்டமான எரிமலை கற்களை கொண்டு ஒரே கல்லில் மிகப்பெரிய சிற்பங்களை நினைவு சின்னங்களாக அவர்கள் வடிவமைத்துள்ளனர். அரைகுறையாக வடிவமைக்கப் பட்ட, வடிவமைக்கப்படாத ராட்சத எரிமலை கற்களையும் காணமுடிகிறது. டச்சு நாட்டை சேர்ந்தவர்கள் 1722,ம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில்தான் இத்தீவை பழங்குடியினரிடம் இருந்து கைப்பற்றினர். அப்போதிருந்து ஈஸ்டர் தீவு என்று அழைக்கப்படுகிறது.
நீண்ட காலமாக மனித வாசனை இல்லாமல் இருந்த இத்தீவில் தற்போது கப்பல் பயணிகள், சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இங்கு வசித்த மோய் மற்றும் அஹு பழங்குடியினரின் வாரிசுகள் ஒருசிலர் தற்போது இத்தீவின் அருகில் உள்ள ஹங்க் ரோவ் என்ற இடத்தில் குடும்பமாக வசித்து வருகின்றனர்.
ஈஸ்டர் தீவு சிலைகள் தொடர்பாக பல காலமாக ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. இவை கி.பி. 1250 , 1500 காலகட்டத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. தீவு முழுவதும் 880,க்கும் அதிகமான சிலைகள் உள்ளன. சிலைகளிலேயே பெரியதாக கருதப்படும் ‘பாரோ’ சிலை 33 அடி உயரமும் 82 டன் எடையும் கொண்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக