டெல்லி: தலைநகர் டெல்லி உள்பட 20 வடக்கு, கிழக்கு மற்றும் வட கிழக்கு மாநிலங்களில் மின் வினியோகம் இன்றும் பாதிக்கப்பட்டது. இதனால் பல்வேறு மின்சார ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.நேற்று வடக்கு மின் தொகுப்பில் ஏற்பட்ட பாதிப்பால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் மின்விநியோகம் துண்டிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இது நடந்து 48
மணி நேரத்திற்குள் மீண்டும் மின் வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் வடக்கு, கிழக்கு மற்றும் வடகிழக்கு மின் தொகுப்புகளில் இன்று பிற்பகல் 1.07 மணிக்கு மின் வினியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் டெல்லி, பஞ்சாப், ஹரியானா, இமாச்சல் பிரதேசம், உத்தரப்பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரகண்ட் உள்ளிட்ட 13 வடக்கு மற்றும் கிழக்கு மாநிலங்கள், 7 வடகிழக்கு மாநிலங்களில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் மெட்ரோ ரயில் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 300 மின்சார ரயில்கள் இயங்கவில்லை. மின்சாரம் இல்லாமல் மருத்துவமனைகள் அதிலும் குறிப்பாக அரசு மருத்துவமனைகள் அல்லாடி வருகின்றன.
இதனால் பாதி இந்தியாவிலேயே மின்வினியோகம் இல்லை. இந்த கோளாறை சரி செய்ய 5 முதல் 6 மணி நேரமாகும் என்று மின் அமைச்சக அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.
இது குறித்து மின்சாரத்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறுகையில்,
பழுதடைந்த 3 மின் தொகுப்புகளை 2 மணிநேரத்திற்குள் சரிசெய்யும் முயற்சி நடந்து வருகிறது. சில மாநிலங்கள் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மின்சாரத்தை எடுத்ததால் தான் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாக மின்சாரம் எடுத்த மாநிலங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக