செவ்வாய், ஜனவரி 07, 2014

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் தமிழர், தூக்கு தண்டனைக்கு தப்பினார்; சட்ட திருத்தத்தால் பலன் பெற்றார்


சிங்கப்பூர்,
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில், தமிழர் தூக்கு தண்டனைக்கு தப்பினார். சட்ட திருத்தத்தால் இவர் பலன் பெற்றுள்ளார்.
இந்தியர்
சிங்கப்பூரில் வசித்து வருபவர் தமிழ் வாலிபர் பிரகாசம் (29). இவரது தந்தை சுபாஷ்கரன்.
கடந்த 2008–ம் ஆண்டு நவம்பர் மாதம் 186.62 கிராம் ஹெராயின் போதைப்பொருள் கடத்தியபோது பிரகாசம் பிடிபட்டார்.
இவர் மீது சிங்கப்பூர் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், பிரகாசத்துக்கு மரண தண்டனை (தூக்குதண்டனை) விதித்து கடந்த 2012–ம் ஆண்டு அக்டோபர் மாதம் தீர்ப்பு அளித்தது. ஆனால் அவரது தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படாமல் நிலுவையில் இருந்து வந்தது.

சட்ட திருத்தம்
இந்த நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் தண்டனை தொடர்பான சட்டத்தை சிங்கப்பூர் அரசு திருத்தியது. அதன்படி, போதைப்பொருள் கடத்தல் வழக்குகளில் மரண தண்டனைக்கு பதிலாக நீதிபதிகள் விரும்பினால் அவர்கள் தங்கள் விருப்பப்படி ஆயுள் தண்டனையும், கசையடி கொடுக்கவும் உத்தரவிடலாம் என கூறப்பட்டுள்ளது.
இதன்படி, பிரகாசம் நிவாரணம் கேட்டு கோர்ட்டை நாடினார்.
தண்டனை குறைப்பு
இதுதொடர்பாக நீதிபதி சூ ஹான் டெக் விசாரணை நடத்தினார். விசாரணையில் பிரகாசம் போதைப்பொருள் கடத்தாமல், தூதுவராக மட்டுமே செயல்பட்டிருக்கிறார் என கண்டார்.
இதையடுத்து அவரது மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகவும், 15 கசையடிகளாகவும் மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.
சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கி தூக்கு மேடைக்கு தப்பிய இரண்டாவது நபர் பிரகாசம் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரைப்போன்று ஏற்கனவே மலேசிய குடிமகன் யோங் வுய் கோங்க் என்பவரும் மரண தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக