புதன், ஜனவரி 01, 2014

ப.சிதம்பரத்திற்கு எதிராக இளையாங்குடியில் கண்டன போஸ்டர்.. பரபரப்பு

இளையாங்குடி: சிவகங்கை மாவட்டம் இளையாங்குடியில் நடந்த யுனைடெட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளை திறப்பு விழாவில் நிதியமைச்சர் ப.சிதம்பரத்திற்கு எதிராக மனித நேய மக்கள் கட்சி சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இளையாங்குடி நகர் முழுவதும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திடீரென்று இளையான்குடி பகுதிகளில் முஸ்லிம்களுக்கு பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவை கடன் தர மறுப்பதாகவும், ப.சிதம்பரம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. இதுகுறித்து மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட தலைவர் சைபுல்லாஹ் பேசுகையில் இளையான்குடியில் உள்ள வங்கிகள் முஸ்லிம்களுக்கு கல்வி கடன் தர மறுக்கின்றன. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கி மேலாளர்களும் கல்வி கடன் விஷயத்தில் கெடுபிடி காட்டுகின்றனர். எனவே அதனை கண்டிக்கும் விதமாக ப.சிதம்பரத்தை எதிர்த்து போஸ்டர் ஒட்டினோம் என்றார். முன்னதாக விழாவில் பேசிய ப.சிதம்பரம் நாட்டின் முதுகெலும்பு வங்கிகள்தான் , பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு வங்கிகள் செயல்படுவதால் நாட்டிற்கு வங்கி அவசியம் எனவே வங்கி கிளைகள் திறக்கப்படுகின்றன. கடந்தாண்டு 7500 வங்கி கிளைகள் திறக்கப்பட்டன. இந்தாண்டு 10ஆயிரம் வங்கி கிளைகள் திறக்கப்படும். இந்தியா தவிர வேறெந்த நாட்டிலும் இத்தனை வங்கி கிளைகள் கிடையாது. இளையான்குடி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியும் முஸ்லிம்களுக்கு கல்வி கடன் தருவது இல்லை என போஸ்டர் ஒட்டியுள்ளனர். அவ்வாறு நடந்திருந்தால் அதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன், அந்த இரண்டு வங்கி கிளைகளிலும் இதுவரை கொடுக்கப்பட்ட கல்வி கடன் குறித்த விபரம் கேட்டுள்ளேன், அதில் முஸ்லிம்களுக்கு எவ்வளவு கடன் கொடுக்கப்பட்டுள்ளது என கேட்டுள்ளேன். தவறு நடந்திருப்பது உறுதியானால் கண்டிப்பாக நடவடிக்கை எடுப்போம், நல்ல இடங்களிலும் ஒருசில கறுப்பாடுகள் உண்டு. எனவே தவறு செய்தவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் 26லட்சம் மாணவர்களுக்கு 54ஆயிரம் கோடி ரூபாய் கல்வி கடன் வழங்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய சமுதயாத்தில் ஆண் குழந்தைகளை படிக்க வைக்கின்றனர். பெண் குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும்.எந்த மதமும் பெண்கள் படிக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆணுக்கு பெண் நிகர்தான் பெண்களும் கல்வி கற்க வேண்டும். அனைத்து வங்கிகளிலும் கல்வி கடன் கண்டிப்பாக தரப்படும் என்றார். விழாவில் யுனைடெட் பாங்க் ஆப் இந்தியாவின் பொது மேலாளர் வத்சலா, துணை பொதுமேலாளர் பாஸ்கரன், முன்னாள் எம்எல்ஏ சுந்தரம், இளைஞர் காங்கிரஸ் தலைவர் சஞ்சய்காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ப.சிதம்பரம் வருவதற்கு சற்று முன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டதால் போலீசார் பெரிதும் தவித்து போயினர். போஸ்டரை கண்டு ப.சிதம்பரமும் அதிர்ச்சி அடைந்தார். இதனால்தான் மேடையிலேயே அதற்குப் பதிலளித்துப் பேசினார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக