புதன், ஜனவரி 01, 2014

மின் கட்டணம் 50% குறைப்பு: டெல்லி அமைச்சரவை ஒப்புதல்

டெல்லியில் மின் கட்டணத்தை 50 சதவீதமாக குறைப்பதற்கு அம்மாநில அமைச்சரவை இன்று (செவ்வாய்க்கிழமை) ஒப்புதல் அளித்தது.அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றும் விதமாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.டெல்லி தலைமைச்செயலகத்தில் இன்று மாலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், மின் கட்டணத்தைக் குறைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.டெல்லிவாசிகளில் மாதத்துக்கு 400 யூனிட் வரையிலான மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு மின் கட்டணத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.டெல்லி அரசின் இந்த மானியத்தின் மதிப்பு, 3 மாதங்களுக்கு ரூ.200 கோடி ஆகும். இந்த மின் கட்டணக் குறைப்பால் 28 லட்சம் பேர் பயனடைவார்கள்.முன்னதாக, டெல்லியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஜனவரி 1-ம் தேதி முதல் தினமும் 667 லிட்டர் தண்ணீர் இலவசமாக வழங்கப்படும் என்று தனது வாக்குறுதிகளில் ஒன்றை நிறைவேற்றும் வகையில், ஆம் ஆத்மி அரசு நேற்று அறிவிப்பு வெளியிட்டது.அதன் தொடர்ச்சியாக, மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும் விதமாக, மின் கட்டணத்தைப் பாதியாகக் குறைத்துள்ளது ஆம் ஆத்மி அரசு.

தனியார் மின் நிறுவனங்களின் நிதி ஆய்வு
இதனிடையே, டெல்லியில் மின்சாரத்தை விநியோகிக்கும் பணியை கவனிக்கும் 3 தனியார் மின் நிறுவனங்களின் நிதி நிலைமை பற்றி தலைமை கணக்கு தணிக்கையாளர் மூலமாக ஆராய உத்தரவிடப்படும் என்று தெரிகிறது.இந்த விவகாரம் பற்றி தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் சசி காந்த் ஷர்மாவை முதல்வர் கேஜ்ரிவால் சந்தித்து விவாதித்தார்.3 தனியார் மின் நிறுவனங்களின் நிதி குறித்து அரசு தணிக்கை செய்ய அதிகாரம் உள்ளது. அதே நேரத்தில் தங்களது நிதி குறித்து அரசு தணிக்கையை ஏற்கத் தயாரா என மின் நிறுவனங்களிடம் கருத்து கேட்டுள்ளோம். புதன்கிழமைக்குள் தமது நிலையை அவை தெரிவிக்க வேண்டும் என்றார் கேஜ்ரிவால்.

'அடுத்த 2 நாளில் அதிகபட்ச நன்மை செய்வேன்'
ஜனவரி 2-ம் தேதி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோர உள்ள நிலையில், அரசு நீடிக்கிறதோ இல்லையோ, அதைப்பற்றி கவலை இல்லை. அடுத்த 48 மணி நேரத்தில் அதிகபட்ச நன்மையை மக்களுக்கு செய்யவேண்டும் என்பதே எனது விருப்பம் என்று முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் கூறினார்.அது குறித்து மேலும் கூறும்போது, "அரசு பிழைக்குமோ பிழைக்காதோ என்பதில் எனக்கு கவலை இல்லை. காங்கிரஸ், பாஜகவை பற்றி உறுதிபட எதுவும் தெரியவில்லை. இந்த அரசுக்கு உள்ள கால அளவு 48 மணி நேரமே இருப்பதாக கருதி, நிர்வாகத்தை நடத்துகிறோம். இந்த காலத்துக்குள் மக்களுக்கு அதிகபட்சமாக என்ன நன்மை செய்ய முடியுமோ அதை செய்ய விரும்புகிறோம்" என்றார் கேஜ்ரிவால்.

1 கருத்து: