வியாழன், ஆகஸ்ட் 22, 2013

எகிப்து இராணுவத்தை கண்டித்து மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

மதுரை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கத்திய நாடுகளும் வார்த்தை ஜாலங்களை மட்டும் வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது. மேற்கத்திய அரசுகள் மற்றும் அதன் தலைவர்களின் நயவஞ்சகத்தை இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளின் இந்த நிலை,கொடூரமான கொலைகளை செய்வதற்கு எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது. எகிப்தில் ஜனநாயகத்தை நசுக்கும் இந்த போக்கு மற்ற அரபு நாடுகளிலும் ஜனநாயகம் மலர்வதற்கான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அதிக பங்களிப்பை அளிக்க வேண்டும். எகிப்தின் நட்பு நாடான இந்தியா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.
இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எகிப்திய அரசாங்கத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து ராஜாங்க உறவுகளையும் முறிக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்கான எகிப்திய தூதரை வெளியேற்ற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் இத்தகைய நடைமுறை எகிப்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.
எகிப்திய அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான கொலைகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு தழுவிய ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றது. இதன் ஒரு பகுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மதுரை மாவட்டம் சார்பாக நெல்பேட்டை அருகில் 21.8.2013 அன்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் இத்ரீஸ் தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாலர் முஹம்மது அபுதாஹிர் வரவேற்புரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் மாவட்ட பொதுச் செயலாளர் முஜிபுர் ரஹ்மான், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் மாவட்ட தலைவர் முஹம்மது இப்ராஹிம் மிஸ்பாஹி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். இறுதியாக பாப்புலர் ஃப்ரண்டின் மாவட்ட செயலாளர் சையது இப்ராஹிம் நன்றியுரையாற்றினார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு எகிப்து இராணுவத்திற்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக