திங்கள், ஆகஸ்ட் 19, 2013

தேசியகொடிக்கு அவமதிப்பு: ஹஸாரே மீது வழக்கு!

ஜான்பூர்: தேசியக்கொடியை அவமதித்ததாக அன்னா ஹஸாரே மீது வழக்குப் பதிவுச் செய்ய ஜான்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லோக்பால் மசோதாவுக்காக உண்ணாவிரதம் நடத்தி பிரசித்திப் பெற்ற அன்னா ஹஸாரே உத்தரப்பிரதேச மாநிலத்தில் அண்மையில் ஜனதந்திர யாத்திரை நடத்தினார். கடந்த ஜூலை மாதம் 29ஆம் தேதி அவர் ஜான்பூரில் உள்ள ஒரு கல்லூரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் தேசியக்கொடியை அவமதித்து விட்டதாக வழக்குரைஞர் ஹிமான்சு ஸ்ரீவஸ்தவா என்பவர் ஜான்பூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், அன்னா ஹஸாரே தனது வாகனத்தில் தேசியக்கொடியை ஒட்டியிருந்தார். மாலையில் சூரியன் மறைந்த பிறகும் தேசியக்கொடியை அவர் கழற்றாமல் வாகனத்தில் நின்று கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.அவரது இந்த செயல் தேசியக்கொடியை அவமதிப்பதாகும். அன்னா ஹஸாரே மீது தேசியக்கொடியை அவமதித்ததாக வழக்கு பதிவு செய்ய ஜான்பூர் போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நரேந்திர பகதூர் பிரசாத், தேசியக்கொடியை அவமதித்த அன்னா ஹஸாரே மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தும்படி ஜான்பூர் லைன் பஜார் காவல் நிலையத்திற்கு உத்தரவிட்டார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக