கூடங்குளம்:கூடங்குளத்தில் வெள்ளிக்கிழமை மெளனவிரதப் போராட்டம் நடைபெற்றது. அணு உலை எதிர்ப்புக்குழுவின் தலைமையில் வியாழக்கிழமை கடலில் நடத்திய மனித சங்கிலி போராட்டத்தில் கடற்படை விமானம் போராட்டக்காரர்களை அச்சுறுத்துவது போல தாழ்வாகப் பறந்ததால் பீதியடைந்த 5 போராட்டக்காரர்கள் நிலை தடுமாறி கடலில் விழுந்தனர். இதில் தலையில் படுகாயமடைந்த மீனவர் சகாயம் மரணித்துவிட்டார். தூண்டில் வளைவில் இருந்து கீழே விழுந்து மரணித்த சகாயத்தின் இழப்புக்கு அனுதாபம் தெரிவித்து நேற்று மெளனவிரதப்
போராட்டம் நடைபெற்றது. வியாழக்கிழமை இரவே சகாயம் இறந்துவிட்டதாக மருத்துவமனை மருத்துவர்கள் அறிவித்துவிட்ட போதிலும் போலீஸ் மற்றும் அரசின் தலையீட்டைத் தொடர்ந்து சகாயத்தின் மரணச் செய்தியை ஒத்திவைத்தனர். சகாயம் நோய்வாய்ப்பட்டு இறந்தார் என்றும், இதில் புகார் எதுவும் இல்லை என்றும் எழுதித் தருமாறு சகாயத்தின் உறவினர்களிடம் போலீஸ் நிர்பந்தத்தால் மருத்துவமனை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால், கையெழுத்திடமாட்டோம் என்று போராட்டக்குழு அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சகாயம் மூளைச்சாவு மட்டுமே அடைந்துள்ளார் என்று மருத்துமனை அதிகாரிகள் பல்டியடித்தனர் என்று போராட்டக்குழு தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சகாயத்தின் மரணம் தொடர்பாக சந்தேகம் நிலவிய வேளையிலும் முன்னரே தீர்மானித்தபடி காலை 11 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கடலில் கழுத்தளவு நீரில் மூழ்கும் போராட்டத்தை துவக்கினர். இப்போராட்டத்தில் பெண்களும், ஆண்களும் கலந்துகொண்டனர். மதியம் 1 மணிக்கு சகாயம் மரணமடைந்துவிட்டதாக அதிகாரப்பூர்வ தகவலை மருத்துவமனை அதிகாரிகள் வெளியிட்டனர். உடனே, போராட்டக்குழு தலைவர்கள் மக்கள் அனைவரும், கடலில் இருந்து வெளியேறி லூர்து மாதா கோயிலில் உள்ள போராட்ட பந்தலுக்கு வருமாறு கட்டளையிட்டனர். சர்ச்சில் மரண அறிவிப்பு மணி முழக்கப்பட்டது. பின்னர் போராட்ட பந்தலில் அனுதாப கூட்டம் பாதிரியார் தலைமையில் துவங்கியது.
இதனிடையே, அணு உலை எதிர்ப்பு போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பி.உதயகுமார் தொலைபேசி மூலம் மக்களிடம் பேசினார். எல்லோரும் மரணித்தாலும் கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டம் தொடரும் என்று அவர் அறிவித்தார். கேரளாவில் இருந்து சி.பி.எம் கட்சியின் மூத்த தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் கூடங்குளம் வருகை தருவதை வரவேற்பதாக உதயகுமார் தெரிவித்தார்.
மனைவியும்,3 பெண்குழந்தைகளும், ஒரு மகனும் அடங்கிய சகாயத்தின் குடும்பத்தை போராட்டக்குழுவும், ஊர் மக்களும் பாதுகாப்போம் என்று போராட்டக்குழு தலைவர்கள் அறிவித்தனர். சகாயத்தின் மரணத்திற்கு காரணம் அரசு தரப்பில் ஏற்பட்ட தாக்குதலே என்று குற்றம் சாட்டி போராட்டக் குழு அதிகாரிகளிடம் புகார் அளித்தது.
இவ்வளவு துயரங்களுக்கு மத்தியிலும் இடிந்த கரையில் ஆறு சிறுவர்களை போலீஸ் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இதுத்தொடர்பாக எவ்வித விளக்கத்தையும் அதிகாரிகள் அளிக்கவில்லை. இதனிடையே விழிஞ்ஞம் முதல் பாண்டிச்சேரி வரையிலான 13 மீனவ கிராமங்களில் வெள்ளிக்கிழமையும் மீனவர்கள் பணி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக