வியாழன், ஆகஸ்ட் 16, 2012

ஊழல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளுமே இந்தியாவின் தலைவிதியை தீர்மானிக்கின்றனர் – ஹஸாரே குழு !

Hazare's associates Kiran Bedi and Arvind Kejriwalபுதுடெல்லி:இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பவர்கள் ஊழல்வாதிகளும், அரசியல்வாதிகளும், கார்ப்பரேட்டுகளும் ஆவர் என கலைக்கப்பட்ட ஹஸாரே குழுவைச் சார்ந்த கிரண்பேடியும், அரவிந்த் கேஜ்ரிவாலும் தெரிவித்துள்ளனர். சுதந்திர தினத்தையொட்டி ட்விட்டர் சமூக இணையதளத்தில் தங்களது செய்தியை இருவரும் பதிவுச்செய்துள்ளனர். இந்தியாவின் தலைவிதியை ஊழல் கறைப்படிந்த
அரசியல் வாதிகளும், கார்ப்பரேட்டுகளும்தான் தீர்மானிக்கின்றனர்.
இவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தியாவை மீட்க நல்ல தலைவர்கள் தேவை. மக்களுக்குகாக செயல்படாதவர்களை ஒடுக்குவதற்கும், மக்களே சட்டங்களை இயற்றுவதற்கும் காலம் விரைவில் வரும் என்று எதிர்பார்க்கிறேன்.
ஒருநாள் நமது நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைக்கும். அப்போது, ஊழல்வாதிகளின் கட்டுப்பாடில் உள்ள நாட்டை மக்களே நேரடியாக மீட்டு விடுவர். அரசியல், வருமானம் ஈட்டுவதற்கு அல்ல; சேவை செய்வதற்கு என்ற நிலை உருவாக்கப்பட வேண்டும்  என்று அரவிந்த் கேஜ்ரிவால் தனது செய்தியில் கூறியுள்ளார்.
கிரண்பேடி தனது செய்தியில் கூறியிருப்பது: லோக்பால் சட்டத்தைக் கொண்டுவர மத்திய அரசு தயாராக இருக்கிறது என்று பிரதமர் கூறுகிறார். பிரதமரின் உரையில் மத்திய அரசு என்ன செய்ய உத்தேசித்துள்ளது என்பதுதான் அதிகமாக உள்ளது.
வாக்கு வங்கியைக் கருத்தில் கொண்டு சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. நேர்மையும், நிர்வாக ரீதியிலான விருப்பமும் இல்லாமல், திட்டங்களையும் அரசின் உறுதிமொழிகளையும் நிறைவேற்ற முடியாது.
அரசியல் ஊழலும் அதிகார வர்க்கத்தில் உணர்வுகளின்றி செயல்படும் போக்கும்தான் இந்த நாடு எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவால்களாகும். அவர்கள் கட்டுப்பாட்டில்தான் நம் நாடு இருக்கிறது.
லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற தேர்வுக் குழு அமைத்து அதன் மூலம் நாடாளுமன்றத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வர பிரதமர் முயல்கிறார். ஆனால், அதில் அவர் உளப்பூர்வமாகச் செயல்பட வேண்டும்.
போலீஸ் துறை, தேர்தல் முறை, நீதித்துறை, நிர்வாகத் துறை ஆகியவற்றில் சீர்திருத்தம் கொண்டு வருவதுதான் நமது நாட்டின் இப்போதைய தேவை.
சுதந்திர தின உரையை எழுதிப் படிக்காமல் உள்ளத்திலும் சிந்தனையிலும் இருந்து பேச பிரதமர் முயல வேண்டும். அப்போதுதான் சாதாரண மக்களும் அவருடன் தொடர்பு கொள்ள முயற்சிப்பர்.
அவ்வாறு பிரதமர் இனி செய்வாரா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பு  என்று கூறியுள்ளார் கிரண்பேடி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக