1968-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் ஜப்பானில் இருந்து புறப்பட்டது இந்தக் கப்பல். கப்பலில் ஹை-டெக் தொலைத் தொடர்பு உபகரணங்கள் இருந்தன. அதில் பயணித்த 80-க்கும் அதிகமானவர்களில், சில மாலுமிகள் தவிர்ந்த மற்றையவர்கள் அனைவருமே அமெரிக்க கடற்படையின் தொலைத்தொடர்பு நிபுணர்கள். இவர்களது நிபுணத்துவம், சங்கேத மெசேஜ்களை டீ-கோடிங் செய்வது!
அமெரிக்க கப்பல், சர்வதேச கடல் பகுதியில் நின்றதால் தாக்குதல் எதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. வட கொரிய போர்க்கப்பல் பீரங்கியால் சுட்டபடி வந்தபோது, இவர்கள் சண்டைக்கு தயாராக இருக்கவில்லை. கப்பலில் ஆயுதங்களும் இல்லை.
இவர்களுக்கு சரணடைவதைத் தவிர வேறு வழி இல்லை என்று தெரிந்ததும், கப்பலில் இருந்த ரகசிய ஆவணங்கள் எல்லாவற்றையும் எரித்தார்கள். அதன்பின் சரணடைந்தார்கள். USS Pueblo கப்பல் வட கொரிய போர்க் கப்பலால் கட்டி இழுத்துச் செல்லப்பட்டது. கப்பலில் இருந்த அனைவரும் கைது செய்யப்பட்டார்கள்.
அமெரிக்கா கொதித்தது. ஆனால், எதுவும் செய்ய முடியவில்லை.
இதற்கிடையே, இந்தக் கப்பலுடன் அகப்பட்ட கடற்படையினரை வைத்து, தமது சொந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டது வட கொரியா.
ஒருவழியாக போட்டோக்கள் எடுத்து, டைம் சஞ்சிகைக்கு அனுப்பி வைத்தார்கள் வட கொரிய அதிகாரிகள். “பாருங்கள், நாம் கைதிகளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம்” என்ற குறிப்போடு வட கொரியா அனுப்பி வைத்த போட்டோக்களை டைம் பத்திரிகை பிரசுரித்தது. அதைப் பார்த்து உலகமே அதிர்ந்தது. வட கொரியர்கள் பலவந்தமாக எடுத்த போட்டோ அது என்பது முழு உலகத்துக்குமே தெரிய வந்தது அது எப்படி? போஸ் கொடுத்த அமெரிக்க கடற்படையினர் செய்த ட்ரிக் ஒன்றுதான் வட கொரியாவை சிக்க வைத்தது.
போட்டோவில் நின்ற அனைவரும், தமது கையின் நடு விரலை உயர்த்தியபடி போஸ் கொடுத்திருந்தார்கள். இது உலகம் பூராவும் அறியப்பட்ட ஒரு lewd gesture சைகை. ஆனால் 1960-களில் வட கொரியர்களுக்கு அது தெரிந்திருக்கவில்லை.
போட்டோ எடுத்தபோது, எதற்காக எல்லோரும் நடு விரலை உயர்த்துகிறீர்கள் என்று வட கொரிய ராணுவ அதிகாரி கேட்டிருக்கிறார். அமெரிக்க கடற்படையினர், “எமது நாட்டில் நடு விரலை உயர்த்திக் காட்டினால், ‘குட் லக்’ என்று அர்த்தம் சொன்னதை வடகொரியர்கள் நம்பி, ஆனந்தமாக போட்டோ எடுத்து அனுப்பியிருந்தார்கள்!
விஷயம் தெரிய வந்ததும், போஸ் கொடுத்த அமெரிக்க கடற்படையினருக்கு கடும் சித்திரவதை நடந்தது. ஆனால், கதை வெளியே போய்விட்டது.
பல நாடுகள் கொடுத்த அழுத்தம், பொருளாதாரத் தடை எச்சரிக்கை என்று வட கொரியாவுக்கு எதிராக உலக நாடுகள் அணிதிரள, இவர்களை விடுவிப்பது என்று முடிவு செய்தது வட கொரிய அரசு. 11 மாதங்கள் இவர்கள் சிறையில் இருந்த நிலையில் ஒருநாள், சிறைக்கு வந்த வட கொரிய ராணுவ அதிகாரி ஒருவர், கப்பலின் கேப்டன் லாயிட் புச்சருக்கு ஒரு உத்தரவு பிறப்பித்தார். “உங்களை விடுவிக்கப் போகிறோம். அதற்குமுன், நீங்கள் எமது நாட்டுக்கும், எமது தலைவருக்கும் நன்றி கூற வேண்டும். அதை நாம் ஒலிப்பதிவு செய்வோம். முன்பு விரலை உயர்த்திக் காட்டியதுபோல ஏதாவது குரங்கு வேலை செய்தால், இங்கேயே சமாதிதான்” என்பதுதான் உத்தரவு.
கேப்டனும் சம்மதித்து, வட கொரியாவுக்கும், அதன் தலைவர் கிம்-II சங்குக்கும் மனப்பூர்வமான நன்றி கூறினார். அது ஒலிப்பதிவு செய்யப்பட்டது. இம்முறை வட கொரியர்கள் உஷாராக இருந்தார்கள். கேப்டன் கூறிய ஒவ்வொரு வார்த்தைக்கும் கொரிய-ஆங்கில அகராதியில் அர்த்தம் பார்த்து, எல்லாமே நன்றி கூறும் வார்த்தைகள்தான் என்று உறுதி செய்து கொண்டார்கள்.
இதிலும் கேப்டன் லாயிட் புச்சர் ஒரு ட்ரிக் செய்திருந்தார். தனது நன்றி கூறலில் ‘to paean’ என்ற சொல்லை உபயோகித்திருந்தார். அவ்வளவாக புழக்கத்தில் இல்லாத இந்தச் சொல்லுக்கு சரியான அர்த்தம், ‘to praise’ என்ற நல்ல அர்த்தம்தான். கொரிய-ஆங்கில அகராதியில் ‘to praise’ என்பதற்கு ‘தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்வது’ என்ற அர்த்தம் இருக்கவே, நன்றி கூறும் ஒலிப்பதிவு ஓகே ஆகியது! ஆனால், ‘to paean’ என்பதை உச்சரிக்கும்போது, ‘to pee on’ (சிறுநீர் கழிப்பது) என்று இழுத்து உச்சரித்திருந்தார் இந்த பொல்லாத கேப்டன்.
இவர்கள் கைது செய்யப்பட்டு சரியாக 11 மாதங்கள் முடிந்த தினத்தில் இவர்களை வட கொரிய – தென் கொரிய எல்லைக்கு அழைத்துச் சென்றனர் வட கொரிய ராணுவத்தினர். இரு நாடுகளுக்கும் இடையில் உள்ள பாலத்தில் இவர்களை தென் கொரியாவை நோக்கி நடக்க விட்டனர். தென் கொரியா அமெரிக்க ஆதரவு நாடு.
புரிந்திருந்தால் பாலத்தில் வைத்தே சுட்டிருப்பார்கள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக