செவ்வாய், ஜனவரி 10, 2012

எய்ம்ஸ் மருத்துவ முதுநிலை படிப்பு: செல்போன், புளூடூத் பயன்படுத்தி நவீன முறையில் தேர்வில் தில்லு முல்லு- டாக்டர் உள்பட 5 பேர் கைது


எய்ம்ஸ் மருத்துவ முதுநிலை படிப்பு: செல்போன், புளூடூத் பயன்படுத்தி நவீன முறையில் தேர்வில் தில்லு முல்லு- டாக்டர் உள்பட 5 பேர் கைதுஇந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் 50 சதவீத மருத்துவ முதுநிலைப்படிப்பு இடங்களை நிரப்புவதற்கான நுழைவுத் தேர்வை நேற்று முன்தினம் டெல்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) நடத்தியது. இந்தத் தேர்வு இந்தியா முழுவதும் 156 மையங்களில் நடந்தது. மருத்துவ முதுநிலைப் படிப்பு நுழைவுத்தேர்வில் நூதன முறையில் தில்லு முல்லு நடப்பதாக டெல்லி குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போனில் தகவல் தெரிவித்தவர், நொய்டாவில் உள்ள தேர்வு மையத்தில் சோதனை நடத்தினால், தில்லு முல்லு நடப்பது தெரிய வரும் என்று கூறினார். இதைத் தொடர்ந்து டெல்லி புறநகர் பகுதியான நொய்டாவுக்கு சென்ற டெல்லி போலீசார், தேர்வு மையத்தில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது அமித்புனியா என்ற மாணவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரிடம் சோதனை நடத்தியபோது அவர் அதி நவீன முறையில் பரீட்சையில் காப்பியடிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. எம்.பி.பி.எஸ். முடித்து விட்டு முதுநிலைப் படிப்பு படிக்க நுழைவுத் தேர்வு எழுதிய அமித்புனியாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தியபோது, மருத்துவ முதுநிலை தேர்வு முறைகேட்டில் ஒரு பெரிய கும்பல் இருப்பது தெரிய வந்தது. உஜ்ஜைனி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். இரண்டாம் ஆண்டு படிக்கும் மோகித் சவுத்திரி (23) என்ற மாணவர்தான் தில்லு முல்லு கும்பலுக்கு மூளையாக இருப்பது தெரிந்தது.

அமித்புனியா கொடுத்த தகவலின் பேரில் நொய்டா தேர்வு மையத்தில் இருந்த கபில்குமார், கிருஷ்ணன் பிரதாப் சிங், பீஷ்மாசிங் ஆகிய 3 மாணவர்கள் போலீசாரிடம் பிடிபட்டனர். இவர்கள் மூவருக்கும் மருத்துவ தேர்வுக்கும் தொடர்பே இல்லை என்று தெரிய வந்தது. கபில்குமார், கிருஷ்ணன் பிரதாப்சிங் இருவரும் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள். பீஷ்மாசிங் பட்டப்படிப்பு படிக்கும் மாணவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் டெல்லி போலீசார் ஒரே இடத்தில் வைத்து விசாரித்த போது தேர்வில் நூதன முறையில் காப்பியடித்தது எப்படி என்பது வெட்ட வெளிச்சமானது. கபில்குமார், கிருஷ்ணன் பிரசாத் சிங், பீஷ்மாசிங் மூவரும் எம்.பி.பி.எஸ். முடித்தவர்கள் என்று போலீ ஆவணம் தயார் செய்து மருத்துவ முதுநிலைப் படிப்பு நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தனர்.

நேற்று முன்தினம் அவர்கள் நொய்டாவில் உள்ள தேர்வு மையத்தில் பரீட்சை எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு மையத்துக்குள் அவர்கள் மூவரும் நவீன தொழில் நுட்பத்துடன் கூடிய செல்போனை மறைத்து எடுத்துச் சென்றிருந்தனர். வலது கையில் முழுகை சட்டைக்குள் அந்த செல்போன் பொருத்தப்பட்டிருந்தது. கேள்வித்தாள் கொடுக்கப்பட்டதும், அவர்கள் மூவரும், தங்கள் சட்டை கை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனில் உள்ள காமிரா மூலம் கேள்விகளை படம் பிடித்தனர்.

கேள்வித்தாளின் 23 பக்கத்தையும் மூவரும் ஆளுக்கு ஒரு பகுதியாக படம் பிடித்தனர். பிறகு அதை அவர்கள் வெளியில் இருந்த மோகித்சவுத்திரி செல்போனுக்கு அனுப்பி வைத்தனர். கேள்வித்தாள் கொடுக்கப்பட்ட 5 நிமிடங்களுக்குள், இந்த வேலை முடிந்துவிட்டது. கேள்விகளைப் பெற்றுக்கொண்ட மோகித் சவுத்திரி, அதற்கான விடைகளை புத்தகத்தில் தேடி கண்டுபிடித்து பல்வேறு தேர்வு மையங்களில் பரீட்சை எழுதியவர்களுக்கு நூதன முறையில் புளுடூத் மூலம் அனுப்பினார்.

பதில்களை மோகித் சவுத்திரியிடம் இருந்து பெறுவதற்காக 6 டாக்டர்கள் தங்கள் சட்டை காலருக்குள் புளு டூத் கருவியை ரகசியமாக பொருத்தி இருந்தனர். அதில் இருந்து விடைகளைப் பெற அவர்கள் காதுக்குள் 'மைக்ரோ இயர் பிளக்' பொருத்தி இருந்தனர். மோகித் சவுத்திரி வெளியில் இருந்து செல்போன் மூலம் விடைகளை சொல்ல சொல்ல.... அது தேர்வு மையத்தில் உள்ள டாக்டர்களுக்கு காதுக்குள் வந்து விழுந்துவிடும்.

இந்த முறையில் அதிநவீனமாக தில்லு முல்லு நடந்துள்ளது. வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். படத்தில் கிரேசி மோகன் செல்போனில் விடைகளை சொல்ல, சொல்ல... டாக்டர் தேர்வு எழுதும் கமலஹாசன் பதில்களை எழுதுவாரே... அதே போலத்தான் இந்த மோசடியும் நடந்துள்ளது. ஆனால் சினிமா படத்தில் பார்த்ததை விட இந்த கும்பல் அதிநவீன கருவிகளை தில்லுமுல்லுக்கு பயன்படுத்தி உள்ளது.

முதுநிலை படிப்பில் எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் 6 டாக்டர்கள் இந்த தில்லு முல்லு செய்துள்ளனர். அவர்கள் ஒவ்வொரு வரும் மோகித் சவுத்திரி, அமித்புனியா உள்ளிட்ட 5 பேர் கும்பலுக்கு ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் வரை கொடுத்ததாக தெரிய வந்துள்ளது. அந்த 6 டாக்டர்கள் யார்- யார்? எந்த தேர்வு மையத்தில் அவர்கள் தேர்வு எழுதினார்கள் என்று விசாரணை நடந்து வருகிறது.

டெல்லி தவிர வேறு எந்தெந்த ஊர்களில் இந்த தில்லு முல்லு பயன்படுத்தப்பட்டது என்று போலீசார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். எனவே தில்லு முல்லு செய்து நுழைவு தேர்வில் காப்பியடித்த டாக்டர்கள் விரைவில் கைதாவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக